admk symbol will be shutdown
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்ற போட்டியில் சசிகலா தரப்பு அணியும், ஓ.பி.எஸ். தரப்பு அணியும் தேர்தல் ஆணையத்திடம் கடுமையாக வாதிட்டு வரும் நிலையில், இறுதியாக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கிவைக்கப்படவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் மரணம், சசிகலா பொதுச்செயலாளராக நியமனம், பன்னீர் செல்வத்தின் எழுச்சி, கூவத்தூர் கூத்து, சசிகலா சிறையில் அடைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு, தினகரன் ஆதிக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தினகரன் வேட்பாளராக நிறுத்தம் என அடுத்தடுத்து திருப்பங்களுடன் வந்து அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், யார் வெல்லப் போகிறார்கள் என்று கேள்விக்கு பதிலை யூகிப்பதற்குள், இரட்டை இலை சின்னத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் ஓ.பி.எஸ். அணியா? அல்லது சசிகலா தரப்பு அணியா? எனும் கேள்விதான் இன்று உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. ஏனென்றால், இரட்டை இலை என்ற சின்னம் தேர்தல் வெற்றிக்கு முக்கிய துருப்புச்சீட்டு என்றால் அது மிகையில்லை.
ஆனால், அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு இருக்கிறார்கள். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா, ஓபிஎஸ் அணி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி முன்னிலையில் இந்த வாதம் நடைபெற்று வருகிறது.

சசிகலா அணி சார்பில் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் வாதாடுகின்றனர். ஓபிஎஸ்அணி சார்பில், வைத்தியநாதன், குருகிருஷ்ண குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடி வருகின்றனர்.
ஆனால், இப்போது நிலவும் சூழலைப் பார்க்கும் போது, கடந்த 1989ம் ஆண்டு மீண்டும் திரும்பும், அப்போது இரட்டை இலையை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது போல் இப்போதும் முடக்கி வைக்கவே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒரு பக்கம் பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை ஆதரிக்கிறார்கள். மற்றொரு பக்கம், கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் இ. மதுசூதனன் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
அதிமுக கட்சிவிதி 20(5)ன் படி,பொதுச்செயலாளர் இல்லாத நிலையில், பொதுச்செயலாளர் மூலம் நியமிக்கப்பட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சிப்பணிகளை குறிப்பாக வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னத்தைக் கூட ஒதுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லும் முன்பாக, துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமித்துவிட்டுச் சென்றார். ஆனால், இந்த இரு நியமனமும் கட்சி விதிகளின்படி செல்லாது என்று தேர்தல் ஆணையத்தின் முன், ஓ.பி.எஸ்.தரப்பில் புகார் தரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஒன்று உடைந்தால் அந்த கட்சியின் பெயரை, சின்னத்தை யார் உரிமை கோருகிறார்கள்? கட்சியின் சின்னம் யாருக்கு போகும்? என்ற ஒரு சூழலில் சில விஷயங்களை கருத்தில் கொள்ளும்.
முதலாவதாக, கட்சியின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் அதிகமாக இருக்கிறார்கள், 2-வதாக அமைப்பு ரீதியாக யார் பக்கம் நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்த இரு அம்சங்களும் அதிகம் உள்ள அணிக்கே சின்னம் கிடைக்க வேண்டும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, எம்.பி.க்கள் அதிகம் இருந்து, அமைப்பு ரீதியாக ஆதரவு இல்லாமல் போனால் கூட சின்னம் முடக்கப்படலாம்.
இது குறித்து முன்னால் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால சாமி கூறுகையில், “ கட்சியின் சொந்த விதிமுறைகளை ஒரு பதிவு பெற்ற கட்சி மீறி இருந்தாலே அந்த கட்சியின் சின்னத்தை திரும்பப் பெற முடியும். ஆனால், இந்த ஓ.பி.எஸ். சசிகலா தரப்பு விவகாரத்தில் இப்போதுள்ள நிலையில், உடனடியாக யாராவது ஒருதரப்பினருக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட வாய்ப்பு மிகவும் குறைவு. பல சிக்கல் கள் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுக்காது'' என்றார்.

ஒரு வேளை தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால், ஓ.பி.எஸ். அணியினரும், சசிகலா தரப்பும் தனித்தனி சின்னத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியது இருக்கும்.
அதிமுக உட்கட்சி சட்டவிதிகளின் படி பொதுச்செயலாளர் என்பவர் நியமிக்கப்படக்கூடாது, தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தான் கடந்த காலங்களில் முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டு வந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் இயற்றப்பட்ட இந்த விதி இன்னும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது.
பொதுச்செயலாளராக போட்டியிடுபவர்களும் தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்து இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால், சசிகலா கடந்த 2011ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு , பின் ஜெயலலிதாவால் மீண்டும் 2012ம் ஆண்டு சேர்க்கப்பட்டார். அப்படி பார்க்கும் போது அவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த காலம் இம்மாதம் 31-ந்தேதி தான் முடிகிறது.

அதிமுக வின் முக்கியமான இருவிதிகளையும் மீறியே சசிகலா, அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் என அனைத்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சூழலில் இரட்டை இலை சின்னத்தையும் அந்த அளவுக்கு எளிதாக எந்த தரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிடாது.
மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசிநாள். ஆதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசயத்தில் தேர்தல் ஆணையம் இறுதியான முடிவு எடுக்காமல், முடிவை தள்ளிப்போடலாம். சின்னத்தை முடக்கி வைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
