ரஜினி என்ற பிம்பத்தை ஏன் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் நடந்த ‘துக்ளக்’ விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுகவையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விமர்சித்து பேசினார். அதேவேளையில் ரஜினிக்கு ஆதரவாகவும் கருத்தைத் தெரிவித்தார். குருமூர்த்தியின் கருத்துக்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்தவரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான செம்மலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது குருமூர்த்தி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து செம்மலை பேசினார்.


“திருச்சியில் நடந்த விழாவில் குருமூர்த்தி அதிமுக அரசை பரிதாபகரமான அரசு என்று கூறியிருக்கிறார். அவர் ஏன் அப்படி பேசினார் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. அவர் ஆதரிக்கும் பாஜக அரசுதான், நாட்டில் தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருப்பதாகப் பரிசுகளை வழங்குகிறது. இன்னொரு விஷயம், ரஜினி என்ற பிம்பத்தை ஏன் இவர்கள் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. இதுதான் என்னுடைய கொள்கை என்று எதையும் அறிவிக்கவில்லை. அதற்கு முன்பாகவே ரஜினியை ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள்?


2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். ரஜினி சொன்ன அதிசயம் அற்புதம் மீண்டும் நடக்கப் போகிறது. பாஜகவைச் சேர்ந்த இல. கணேசனும் 2021-ல் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என்று தெரிவித்துள்ளார். இதுதான் வரும் தேர்தலில் நடக்கப்போகிறது” என்று செம்மலை தெரிவித்தார்.