வைகோ!வை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நிகழ்ந்த தருணங்களில் அவர் மத்தியில் ஆண்ட காங்கிரஸுக்கும், தமிழகத்தை ஆண்ட திமுகவுக்கு எதிரணியில் இருந்தார். ஈழத்தில் தமிழர் பகுதி மீது ராஜபக்‌ஷே அள்ளிக் கொட்டிய குண்டுகளை விட இந்த இரு கட்சிகளின் மீது வைகோ கொட்டிய விமர்சன குண்டுகளின் வீச்சு அதிகம். 

அதேபோல் பிரபாகரனின் தாய், பார்வதியம்மாள் நோயுற்ற நிலையில்  விமானத்தில் சென்னை வந்திறங்கினார். அவரை கீழ் இறக்கி, மருத்துவமனையில் சேர்க்க அனுமதிப்பதற்கு, கருணாநிதியின் அரசுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வரவில்லை. இந்த விவகாரத்தையும் கையிலெடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவமாடினார் வைகோ. 

தமிழ் சமூகத்தின் நலனுக்கு எதிரான இயக்கங்கள் திமுகவும், காங்கிரஸும். என்று தமிழக வீதிகள் தோறும் கர்ஜித்தார், கண்ணீர் விட்டார், கடும் சொற்களில் சாபமும் விட்டார். 

ஆனால் சில வருடங்கள் உருண்டோடிய நிலையில், வைகோ இப்போது இருப்பது திமுகவின் நிழலில். தேசம் தழுவி காங்கிரஸ் கூட்டணியையும் தன் தலைமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். எந்த இரட்டை கட்சிகளுக்கு எதிராக வைகோ பொங்கினாரோ, இன்று அதே இரட்டை கட்சிகளுக்கு ஆதரவாக மனிதர் தெளிந்த நீரோடை போல் பேசியிருக்கிறார். இதனால்தான் உங்களுக்கு ரெட்டை நாக்கா? என்று விமர்சன தீ கொளுத்துகின்றனர் அதிமுகவினர். 

அப்படி என்ன பேசியிருக்கிறார் வைகோ? மூன்றாவது அணி அமைக்க முயலும் தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்து சென்றார். அதை மையமாக வைத்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக பி.ஜே.பி.யுடன் இணைய ஸ்டாலின் முடிவு, காங்கிரஸை கைகழுவுகிறது திமுக என்றெல்லாம் தகவல்கள் பரவி வரும் நிலையில்.... தெலுங்கானா முதல்வரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்திருப்பதால் எந்த அரசியல் மாற்றமும் நிகழப்போவதில்லை. திமுக. தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக ராவிடம் எடுத்துக் கூறிவிட்டது. காங்கிரஸ் தலைமையில், மாநில கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் எனௌம் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. யூகங்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். 

ஏதோ ஒன்றுபட்ட திமுக மற்றும் காங்கிரஸின் பிஆர்ஓ. ரேஞ்சுக்கு வைகோ இப்படி திருவாய் மலர்ந்திருப்பதாக போட்டுத் தாக்கும் அதிமுக. இரண்டு கட்சிகளையும் அன்று கொட்டியும் இதே நாக்குதான், இன்று அவர்களை கொண்டாடுவதும் அதே நாக்குதானா? உங்களுக்கு ரெட்டை நாக்கா இல்லை ஒன்றுதானா வைகோ? என்று சோஷியல் மீடியாவில் துவைத்தெடுத்துள்ளனர். 

இதற்கு சந்தர்ப்பவாத அரசியல் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கெல்லாம் எந்த தகுதியுமில்லை என்று சிவக்கிறது மதிமுக.  ஏதென்ஸ் நகரமே அதிரும் வகையில் ஒரு பதிலை தட்டிவிடுங்கள் வைகோ சார்!