admk poster in dmk colors

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா திமுகவின் பிரதான கலரான கருப்பு சிவப்பில் நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை தொகுதி குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதாவது, 110 விதியின் கீழ், ரூ.1200 கோடியில் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் தேவையை போக்குவதற்கு பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்தார்.

மேலும், ரூ.4.5 கோடியில், மதுரை பொதுப்பணித்துறை புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும் எனவும், ரூ. 8.5 கோடியில் மதுரை சட்டக்கல்லூரி வளாகத்தில் புதிய கட்ட்டம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

ரூ.26.5 கோடியில் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் வளாகத்தில் புதிய கட்டடம், கலையரங்கம் கட்டப்படும் எனவும், மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில் நூலகம் அமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முதலமைச்சர் எடப்பாடிக்கு போஸ்டர் அடித்துள்ளார்.

இதில் அதிமுகவின் பிரதான் கலரை மறந்து கருப்பு வெள்ளை சிவப்புக்கு பதிலாக கருப்பு சிவப்பை மட்டும் வைத்து போஸ்டர் அடித்துள்ளார்.

இதையறியாது சில சுவர்களிலும் அவர்கள் ஒட்டியுள்ளனர். இதை பார்த்த மக்கள் ஆச்சரியத்துடனும், அதிமுகவினர் அதிர்ச்சியுடனும், திமுகவினர் ஏளனமாக சிரித்து கொண்டும் சென்றனர்.

எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் இந்த அறியாமை அதிமுக வட்டாரங்களில் பெரிய புயலை கிளப்புமா என பொறுத்திருந்து பார்ப்போம்.