2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கச்செய்து 3-ம் முறையாக ஆட்சியைப் பிடித்தோம் என அழியாப் புகழை பெற பணியாற்றுவோம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் தீர்மானம் இயற்றினர்.

 
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தொடர்ச்சியாக 2-வது முறையாக வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதார். 2016, மே 23 அன்றுதான் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் கூட்டமு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார்.

 
இக்கூட்டத்தில், ‘ஜெயலலிதா தொடர்ந்து வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த நான்காம் ஆண்டு நிறைவுற்று, 5-ம் ஆண்டு இன்று தொடங்குகிறது. சட்டப்பேரவையில் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவரது லட்சியத்துடன் சரித்திரம் போற்றும் இந்த அரசை மக்கள் பாராட்டுகிறார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
மேலும், ‘முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து, ஜெயலலிதா வழியில் ஒன்றரை கோடி தொண்டர்களின் கனவை நனவாக்கி பொற்கால ஆட்சியை நடத்தும் முதல்வர், அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதல்வருக்கும் ஜெ., பேரவை சார்பில் நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறோம். ஐந்தாமாண்டு தொடக்க நன்னாளில் 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி வாகை சூட அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கச்செய்து 3-ம் முறையாக ஆட்சியை அமைத்தோம் என்ற அழியாப் புகழை முதல்வர் துணை முதல்வரிடம் சமர்பிக்கும் வரை அயராது களப்பணியாற்றுவோம்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.