முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த அணைகள் பாதுகாப்பு மசோதாவை, தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வந்திருப்பதாக மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள அணைகளைப் பாதுகாக்கும் வகையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்தின் நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஆனால், அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறது. மசோதாவில் உள்ள அம்சங்கள் பல முரணாக உள்ளன. இந்த மசோதவை திரும்பப் பெற வேண்டும்'' என தனது எதிர்ப்பை பதிவுசெய்தார்.
இந்த மசோதா மீது அதிமுகவின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் பேசும்போது, “பிரதமர் தொலைநோக்கு பார்வையுடன் மசோதாவை கொண்டுவந்துள்ளார். அதே நேரம் கேரளாவில் இருக்கும் அணைகள் மூலம் சில அரசியல் கட்சிகள் தவறான வதந்திகளை பரப்புவதால் அணைகளை பாதுகாக்க சட்ட பிரிவுகளை இந்த மசோதாவுடன் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகளின் உரிமை மற்றும் அதன் செயல்பாடுகள் பாதிக்காத வகையில் அணை பாதுகாப்பு மசோதா அமைய வேண்டும்” என்று பேசினார்.


தமிழக எம்.பி.கள் மசோதா குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பிறகு ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “முல்லைப் பெரியாறு அணையை போல ஒரு மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை மற்ற மாநிலத்தில் அமைந்திருந்தால், ‌அந்த அணையின் மீது உரிமை உள்ள மாநிலம் பாதிக்கப்படாத வகையில் மசோதாவில் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாவினால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என உறுதி அளித்தார்.

 
பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக, 2016-ல் அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டபோது இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2016, செப்டம்பர் 12 அன்று இதுதொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதில்,  “இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மாநில உரிமைகள் பறிக்கப்படும். தமிழகம் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை எதிர்க்கிறது” என ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், தற்போது அந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒற்றை எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.