கொரோனா தொற்று எதிரொலியாக டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை தமிழகம் அழைத்து வருவதற்கான பயணச் செலவை  தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி ரவீந்திரநாத் ஏற்றுக்கொண்டுள்ளார்,இந்நிலையில் அவருக்கு இஸ்லாமிய இயக்கங்கள் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும்  தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது .  இப்பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராடி வந்த டெல்லி அரசு , கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2500 பேரை வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது .

அதாவது டெல்லியில் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில்  பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது , பலருக்கும் கொரோனா பரவ ஜமாத்தினர்  காரணமாக இருந்ததாக கூறி ,  டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் மீது  எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதுடன் ,  பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த தப்லீக் ஜமாத்தினர் மீது விசா நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.  முன்னதாக நிஜாமுதீனில் உள்ள  மார்க்கஸ் மசூதியிலிருந்து சுமார்  2346 பேரை மத்திய அரசு வெளியேற்றியது .அவர்களில் 632 பேர் மருத்துவமனைகளுக்கும் மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர் . இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகியும் கொரோனா பாதிப்பில்லாத தப்லீக் உறுப்பினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் . இந்நிலையில் இதில் தலையிட்ட  முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி  அரசு ,  உள்துறை அமைச்சகத்துக்கு இரண்டு முறை கடிதம் எழுதியது அதில்,  தப்லீக் ஜமாத்தினரை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. 

அதாவது மூன்றாயிரம் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத நிலையிலும் சுமார் 21 நாட்களுக்கும்  மேலாக டெல்லியில் பல்வேறு இடங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு  மேற்கொள்ளவேண்டிய  வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில்  டெல்லி அரசு வலியுறுத்தி இருந்தது .  ஆனால்  அந்த கடிதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததை அடுத்து  வெளிநாடுகளைச் சேர்ந்த 167 தப்லீக் உறுப்பினர்களை தவிர மீதமுள்ள இந்தியாவை சேர்ந்த 2446 பேரை அவரவர் வீடுகளுக்கு  அனுப்பி வைக்க டெல்லி அரசு அதிரடியாக முடிவெடுத்தது ,இந்நிலையில் அவர்களை மீட்டு வர அண்ணாசாலை மக்கா மசூதியின் இமாமும், முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான மன்சூர் காஸிபி, தொழிலதிபர் புரபஷனல் மீரான் போன்றோர் கொண்ட குழுவும், த மு மு க, ம ஜக, SDPI ,  போன்ற கட்சிகளும் முனைப்புக் காட்டிவந்தன

இந்த நிலையில்  தமிழகம் திரும்ப போதிய வசதியின்றி  தவித்து வந்த தப்லீக்  ஜமாத் உறுப்பினர்களின் ஏழ்மை நிலை அறிந்த  தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் - ன் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தாமாக முன்வந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்யவும், அவர்கள் தமிழகத்துக்கு திரும்புவதற்கான முழு பயணச் செலவையும் ஏற்றுக் கொள்ளவதாக தெரிவித்தார், இந்நிலையில் இன்று மதியம் 3:30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட சிறப்பு  ரயிலில் தப்லீக் ஜமாத்தினர் உற்சாகத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். 

கையில் பணமின்றி தவித்திருந்த தங்களுக்கு முன்வந்து  உதவிய எம் .பி ரவீந்திரநாத் அவர்களுக்கு அவர்கள் நன்றி கூறிக் கொண்டதுடன், புறப்படுவதற்கு முன் அவருக்காக துவா என்னும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி தங்களது இதயபூர்வமான நன்றிகளையும் வெளிப்படுத்தியுள்ளனர் .இந்நிலையில் டெல்லியில் இருந்து  புறப்பட்டுள்ள ரயிலில் ஹரியானா உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமாத்தினருடன் தமிழக ஜாமாத் உறுப்பினர்களும் புறப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்  சித்தீக் IAS மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் தப்லீக் ஜமாத்தினரை வரவேற்க இஸ்லாமிய அமைப்பினர் காத்துள்ளனர்.