நான் என்னுடைய தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டேன். நான் அவர்களிடம் பேசுவதாக இல்லை என எம்.பி.பதவியை ராஜினமா செய்த  அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

2 மாநிலம் தொடர்பான பிரச்னையில் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தந்து ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் அளித்துள்ளார்.

இதற்க்கு முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மிகுந்த மனவேதனையை தருகிறது. முதல்வர், துணை முதல்வர் இருவரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.

சக எம்பிகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். துணை சபாநாயகர் தம்பிதுரை, வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுகவின் ஆலோசனையைப் பெற்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

எனினும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, 2 வருடம் பதவி முடிந்த நிலையில் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கும் நான் எனது நாடாளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முத்துக்கருப்பன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வாசித்துக் காட்டினார்.

ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தொடர்ந்து போராடியவர், தமிழகத்தில் 19 மாநிலங்கள் காவிரி நீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றன. ஜெயலலிதா போராடி தீர்ப்பை பெற்றார் அந்தத் தீர்ப்பை செயல்படுத்தாமல் உள்ளனர்.

நீதித்துறையை மிகவும் மதிக்கிறோம், உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் காலதாமதம் செய்யப்படுகிறது. 2 மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் அதனை செய்ய முடியும். ஜெயலலிதா அளித்த பதவி என்பதால் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

தொடர்ந்துப் பேசிய அவர் நான் என்னுடைய தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டேன், முதல்வர் பேசியதாக சொன்னார்கள். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதாக இல்லை, ஏனெனில் என்னுடைய அண்ணன்மார்களிடம் பேசினால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள். ஜெயலலிதா கொடுத்த பதவி அவர் பாடுபட்ட காவிரி விஷயத்திற்காக ராஜினாமா செய்கிறேன்.

கட்சியில் ஒரு பதவி கொடுத்தால் அது அவர்களின் பொறுப்பு, ஆனால் ஜெயலலிதா கொடுத்த பதவி இது. மிகுந்த மனவேதனையுடனே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த மக்களுக்கு பயன்படாத பதவி எதற்காக என்பதால் தான் நான் ராஜினாமா செய்கிறேன்.

மேலும் பேசிய அவர், அதிமுக எம்பிகள் போராடிய போது திமுகவில் இருந்து கனிமொழி உள்ளிட்டோர் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஒதுங்கி இருந்தார்கள் நான் தான் அவர்களை அழைத்து நடுவில் வந்து நிற்கச் சொன்னேன், ஏனெனில் அனைவரின் போராட்ட நோக்கம் ஒன்று தான். மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறது என முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.