மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் அதிருப்தியடைந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் கொடுக்க உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம், தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் காலக்கெடு முடியும் வரை பொறுத்திருப்போம் என அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

ஆனால், கடைசிவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால், அதிருப்தியடைந்த அதிமுக எம்பிக்கள், அருண்மொழித்தேவன், அரி உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்தனர்.

அதேபோல மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், எம்பி பதவியால் தமிழக உரிமையை மீட்க முடியாததாலும் அந்த பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மாநிலங்களவை எம்பி முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், தனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் கொடுத்தார். அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்கருப்பன், தமிழக அரசு சார்பிலும், தமிழக எம்பிக்களும் முடிந்தவரை அழுத்தம் கொடுத்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்டது.

எதற்காக ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தினாரோ, அதை நிறைவேற்ற முடியாமல் போனதால், அவர் வழங்கிய பதவியை ராஜினாமா செய்ய போவதாக விளக்கம் அளித்தார்.