தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, 75 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியதையடுத்து, அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்த ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிசிக்சை அளிப்பதை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தடுத்துவிட்டதாகவும் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார். "வெளிநாட்டில் சிகிச்சை பெற மத்திய அரசு ஏர் ஆம்புலன்ஸ் தருவதாக சொன்னது. ஆனால், அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சைபெற்றால், இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும் கௌரவமும் போய்விடும் என்று சொல்லியிருக்கிறார். முதல்வரின் உயிரைவிட மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் பின்னணியை இந்த அரசு விசாரிக்க வேண்டும்" என்றும் சி.வி. சண்முகம் கூறினார்.

கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தபோது ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சுயநினைவோடு இருக்குபோது அவரே வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை” எனக் கருத்தை முன் வைத்தார்.

இதனால் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில் சந்தேகம் இருப்பதால் அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வலியுறுத்தினார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார், போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்தால் உண்மை தெரியவரும் என குறிப்பிட்டார்.

இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து அமைச்சர்களை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் கடுப்பான சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பிய சந்தேகங்களையே தாம் கேட்டதாக தெரிவித்தார். ஆனால் தமது கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்கள், அரசு அதிகாரிகளை இவ்வாறு கேள்வி கேட்கலாமா என்று கேட்பதாக கூறினார். குற்றச்சாட்டு என வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனக் கூறுவதும், மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதமாக பேசுவதையும் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தெரிவித்தார்.

ஒரு திருடன் மற்றொரு திருடனுக்கு சாட்சி சொல்வதாக விமர்சித்த அமைச்சர் சி.வி.சண்முகம், வாய்க்கு வந்ததை எல்லாம் டி.டி.வி.தினகரன் பேசுவதாகவும் எச்சரித்தார்.

இதனையடுத்து இன்று கடலூர் அதிமுக எம்.பி. அருண்மொழித்தேவன் மற்றும் எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகத்தில் பேட்டியளித்தனர். அதில், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் அமைச்சர் சண்முகத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது சரியா? ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினரை டிடிவி தினகரன்தான் தூண்டிவிடுகிறார். மேலும் அமமுக கட்சியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர் டிடிவி தினகரன் என கூறினார்.