ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எந்தத் தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விண்ணப்ப மனுக்கள் பெறுவது, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்டவற்றை, முதலில் அறிவிப்பார். அவர், தேர்தல் பிரசாரத்தை துவக்கிய பின் தான், தி.மு.க., அணியில், தொகுதி பங்கீடு முடிவே வெளியாகும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் அறிவித்ததும், தினகரனின் அ.ம.மு.க., - தி.மு.க., தங்கள் கட்சி வேட்பாளர் பெயரை அறிவித்த நிலையில், அ.தி.மு.க., அறிவிக்க வில்லை.

அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம், இம்மாத துவக்கத்தில் இருந்து, அ.தி.மு.க., விருப்ப மனுக்களை பெற்றுள்ளது. 

இபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வரும் தற்போதைய அதிமுக ஒரு மாதத்துக்கு மேலாக பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தற்போதுதான் கூட்டணி குறித்த பேச்சு முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில்  ஜெயலலிதா பிறந்த நாளான, 24ம் தேதி, வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட, அதிமுக திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் கூட்டணி இறுதியானதும், மற்ற கட்சிகளுக்கு வழங்கிய தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை திரும்பப் பெற்றும்; அதிக எதிர்ப்பு வரும் வேட்பாளர்களை மாற்றி, மார்ச் முதல், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும், அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.