தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கு, தொடரும் வருமானவரித்துறை ரெய்டு என கடும் சிக்கலில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது புது சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. தற்போது ஆளும் அதிமுகவில் உள்ள 116 எம்எல்ஏக்களும் சாதி ரீதியாக பிரிந்து நிற்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சாதி ரீதியாக ஒன்று கூடி விவாதித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா இருந்தவரை எம்எல்ஏக்கள் சாதி, மதம் என யாரும் பிரிந்து நின்று செயல்படாமல்தான் இருந்தனர். அவரின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு இருந்த எம்எல்ஏக்கள் தற்போது அந்த பயம் விட்டுப் போய் துணிந்து களத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள், அவர் இருந்திருந்தால் இந்நேரம் கேபினட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமியை தற்போதுள்ள அமைச்சர்கள் மிரட்டியே அமைச்சர்களாக தொடருவதாக எம்எல்ஏக்கள் நினைக்கிறார்கள்.

பெரும்பாலான அமைச்சர்கள் ஊழல், ரெய்டு என சிக்கினாலும் அவர்களை மாற்ற இபிஎஸ் பயந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

எம்எல்ஏக்களைப் பொறுத்தவரை கூவத்தூரில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று வரை  நிறைவேற்றப்படவில்லை. மேலும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்காக தலைமை மூலம் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வந்த தொகையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.

 

இதனால் வெறும் எல்ஏல்ஏவாக மட்டும் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர்கள் தற்போது தான் அமைச்சர் பதவி வேண்டும் போர்க்கொடி உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே உள்ள அமைச்சர்களை நீக்கிவிட்டு சுழற்சி முறையில் எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என இபிஎஸ்ஐ நெருக்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் சாதி ரீதியாக ஒன்றிணைந்து தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என  கேட்டு வருகின்றனர்.

சாதி ரீதியாக எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்தால் அது ஆட்சிக்கே ஆபத்து என்பதால் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எம்எல்ஏக்களை சமாளிப்பது எப்படி என யோசனையில் ஆழ்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.