அதிமுகவின் தற்போதைய தலைமையை கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் புறக்கணித்துவிட்டனர் என்று அதிருப்தி எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ராமச்சந்திரன் ஆகியோர் குரல் எழுப்பியதால், அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்திருந்தது. இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோரை அழைக்கவில்லை. இந்நிலையில் இன்று நடந்த கூட்டம் பற்றி கலைச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

 
“கட்சியில் உள்ள இரட்டைத் தலைமையால்தான் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்தது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலமாக இருக்கும். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வரும்போதுதான் ஜெயலலிதா விரும்பியதுபோல நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அந்த எண்ணமே இல்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
தற்போதைய ஆட்சியாளர்களை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பதும் சந்தேகமாக உள்ளது. அதிமுக என்பது ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம். ஆனால், தற்போது வாக்கு வங்கி மிகப் பெரிய அளவில் சரிந்துவிட்டது. இதற்குக் காரணம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிமுகவின் தலைமையைப் புறக்கணித்துவிட்டார்கள். தேர்தலில் அதிமுக பெற்றா வாக்கு வங்கியும் இதை உணர்த்துகிறது.” என்று கலைச்செல்வன் தெரிவித்தார்.