admk mla fasting protest against government

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. இதில், எம்எல்ஏக்கள் ஆதரவுக்காக இரு அணிகளும் மோதி கொண்டு இருக்கின்றன. இதன் உச்சம் ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தல் ரத்து ஆனது.

பெரும்பாலான எம்எல்ஏக்கள், சசிகலா அணியில் இருந்து விலக முயற்சிக்கின்றனர். ஆனால், முடியவில்லை. இதனால், பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, சூளேரி எம்எல்ஏ கனகராஜ் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் களம் இறங்கினார்.

ஆனால், மேலிடத்து பிரஷர் காரணமாக அவர், போராட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். அதில், ஒரு பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன், கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பூர் தெற்கு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் அரசு செய்யவில்லை என கூறி, அதிமுக எம்எல்ஏ குணசேகரன் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் குமரன் நினைவகம் அருகே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அவர், அரசு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என புகார் தெரிவித்து வருகிறார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவின் ஒரு அணிக்கு தலைவலி உருவாகியுள்ளது.