பொதுவெளியிலும் சரி, சட்டமன்றத்திலும் சரி, ஜெயலலிதாவின் புகழ்பாடுவதை குறைத்துக்கொண்ட அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகழ்பாடுகின்றனர். 

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரது பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல், அவர் கூறுவதை அப்படியே கேட்டு செயல்படுபவர்களாக இருந்த தற்போதைய ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவின் புகழ்பாடுவதை முழுநேர பணியாகவும் கொண்டிருந்தனர். சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் ஜெயலலிதாவின் புகழ்பாடி அவரது பெயரை வைத்தே அரசியல் செய்தனர். 

அவர் மறைந்தபிறகும் அதேநிலை சற்று காலத்திற்கு நீடித்தது. காலப்போக்கில் ஜெயலலிதாவின் புகழ்பாடுவது குறைந்துவிட்டது. அண்மைக்காலமாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிறுத்தப்பட்டு அவர்கள் புகழப்படுகின்றனர்.

ஜெயலலிதாவின் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று கூறிவந்த அமைச்சர்கள், தற்போது அவரை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சிதான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியின் நீட்சி என்று ஆட்சியாளர்கள் கூறினாலும் முன்புபோல் ஜெயலலிதாவின் பெயரை பெரிதாக முன்னிறுத்தவதில்லை. மாறாக பழனிசாமி-பன்னீர்செல்வத்தின் பெயரே தூக்கி பிடிக்கப்படுகிறது. அவர்களின் கூட்டு தலைமை சிறப்பாக உள்ளதாக அமைச்சர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். 

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆட்சிக்கும் குறிப்பிட்ட கட்சிக்கும் தலைமையாக இருப்பவர்களை முன்னிறுத்துவது தான் எதார்த்தம் என்றாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சி சிறந்தது என்று கூறுகிற அளவிற்கு இவ்வளவு குறுகிய காலத்தில் சென்றது பெரிய விஷயம்தான். ஜெயலலிதாவின் ஆட்சியை விட முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது என்ற கூற்றுக்கு சொந்தக்காரர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அவரது கருத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் அமைச்சரின் அந்த பேச்சு முதல்வர் பழனிசாமியின் மனதை குளிவித்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. இப்படியாக நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ஜெயலலிதாவின் பெயரை ஓரங்கட்டிவிட்டு பழனிசாமியின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது.

அது சட்டமன்றத்திலும் எதிரொலிக்கிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இன்றைய விவாதத்தின்போது, பேசிய அமைச்சர் ராஜலட்சுமி, அம்மா என்ற ஒற்றை சொல்லே அதிமுகவினருக்கான வேத மந்திரம் என தெரிவித்தார். 

அதன்பிறகு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் புகழ்பாட தொடங்கிவிட்டார். கடல் நீர் கூட வற்றும். ஆனால் பழனிசாமி மீது பன்னீர்செல்வம் வைத்துள்ள பாச நீர் வற்றாது என்றும் மருது சகோதரர்களை போல ஓபிஎஸ்-இபிஎஸ்-சின் சகோதர பாசம் வரலாற்றில் இடம்பெறும் என பேசினார். 

ஆட்சியின் தலைமையாக இருப்பவர்களை அமைச்சர்கள் புகழ்ந்து பேசுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதிமுக அமைச்சர்கள் ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கிய ஜெயலலிதாவைவிட தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வரின் புகழ்பாடுவது, ஜெயலலிதாவின் புகழையே மங்க செய்யும் அளவிற்கு அமைந்துள்ளது.