ADMK Ministers said We will continue to speak about MGR

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அ.தி.மு.க.வில் மீண்டும் முளைத்திருக்கிறது ‘எம்.ஜி.ஆர்.’ நினைவு விதை. இது விருட்சமாகுமா அல்லது வீணாகுமா என்பது போகப்போக புரியும்...

ஜெயலலிதாவின் அதிகார ஆக்டோபஸ் கரங்கள் அ.தி.மு.க.வை முழுமையாக சூழ்ந்திருந்த காலத்தில் அக்கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் பெயர் கிட்டத்தட்ட மறக்கடிக்கவும், மறுக்கவும்பட்டது. எங்கும் எதிலும் அம்மா, அம்மா என ஜெயலலிதாவின் புகழ் மட்டுமே பாடப்பட்டது. ஒவ்வொரு முறையும் தான் நிகழ்த்தும் உரைகளின் இறுதியில் ‘பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!’ என்று ஜெயலலிதாவின் சம்பிரதாய வார்த்தைகளில் மட்டுமே எம்.ஜி.ஆரின் பெயர் பிழைத்துக் கிடந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், மெள்ள மெள்ள அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரின் நினைவு ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அதிலும் தற்போது அவரது நூற்றாண்டுவிழா வேறு கொண்டாடப்படுவதால் எம்.ஜி.ஆர். மசாலா சற்று தூக்கலாகவே தென்படுகிறது அக்கட்சியில். அது சட்டமன்ற கூட்டத்திலும் கமகமப்பதுதான் அழகு...

‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சியை கட்டிக் காத்ததால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்.’ என்று முதல்வர் எடப்பாடி, எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டினார். இதைத்தொடர்ந்து பேச துவங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புரட்சித்தலைவரின் ஆன்மாவுக்கே குளிர்காய்ச்சல் பிடிக்கும் வண்ணம் புகழ் பாட துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் எழுந்து ‘வெளிநடப்பு செய்கிறோம்’ என்று சொல்ல, தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

இதைகண்டு துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் “துரைமுருகனே, எம்.ஜி.ஆரை பற்றி பல முறை பேசியுள்ளார். இப்போது ஏன் வெளிநடப்பு செய்கிறார் என்று புரியவில்லை.” என்றார்.

உடனே அமைச்சர் உதயகுமார் “தி.மு.க.வை புரட்சித்தலைவர்தான் 13 ஆண்டு காலம் வனவாசம் வைத்திருந்தாரே, அந்த ஆதங்கத்தில்தான் தி.மு.க.வினர் அவரது புகழை கேட்க விரும்பவில்லை என தோண்றுகிறது.

ஆனாலும் எம்.ஜி.ஆரின். புகழை தொடர்ந்து பேசுவோம்.” என்று விடாமல் ரன் எடுத்தார். இதற்கு அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

எப்படியோ தங்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட கோடீஸ்வர வாழ்க்கைக்கு விதை போட்ட எம்.ஜி.ஆரை அ.தி.மு.க.வினர் மீண்டும் நினைவு கூர்ந்தது சிறப்புதான். அதற்காக அவர்களே சொல்வது போல் ‘வாழ்க்கை பிச்சை போட்ட’ அம்மாவை! மறக்காமல் இருந்தால் சரி.