சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத அதிமுக என்ற செயல் திட்டம் வெற்றியடையும் நிலைக்கு வந்துள்ளது. அதன் முதல்கட்டமாக தினகரன் வெளியேற்றப்பட்டு விட்டார். அடுத்து இரு அணிகளின் இணைப்பு வேலைகளும் தீவிரம் அடைந்துள்ளன.

மத்திய அரசின் கெடுபிடியால் இருந்து, பன்னீரால் மட்டுமே  அமைச்சர்களை காப்பாற்ற முடியும் என்பதால், அவருக்கு கீழ் செயல்படுவதில் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று எடப்பாடி, தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி உள்ளதாக தகவல்.

மேலும், சசிகலா குடும்பம் என்ற ஒரு மிகப்பெரிய இடையூரில் இருந்து தப்பித்ததில், எடப்பாடிக்கு மிகவும் சந்தோஷமே.

இந்நிலையில், இரு அணிகள் இணைப்புக்கு பின்னர் அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று ஏற்கனவே பேசப்பட்டாலும், தினகரன் ஆதரவாளர்கள் அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்பதில் பன்னீர் தரப்பு உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால், அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு,உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர்  உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோல், காமராஜ், ஓ.ஸ்.மணியன், வெல்லமண்டி நடராசன் ஆகியோருக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாக தெரிகிறது.

பன்னீர் தரப்பில் இருந்து, செம்மலை, மாபா பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பன்னீரின் இந்த நிபந்தனைகளில் எடப்பாடிக்கு பெரிய ஆட்சேபனை எதுவும் இல்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.  

எனவே, அமைச்சர் பதவியை எப்படியாவது காப்பாற்றி கொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான், உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள்  பன்னீர் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் என்றும்  கூறப்படுகிறது.

முதல்வர், பொது செயலாளர் என்று, கட்சி, ஆட்சி ஆகிய இரண்டுமே, பன்னீர் கைக்கு போக இருப்பதால், ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும், பலரது செல்வாக்கு குறைந்து விடும் என்ற அச்சமும் சிலருக்கு இருப்பதாகவே தெரிகிறது.