*    வன்முறை மற்றும் ஆயுதங்களால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அமைதி பேச்சு மூலம் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இதுவரையில் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகள் கூட சகோதரத்துவ, ஆரோக்கியமான பேச்சே பிரச்னைக்கு தீர்வு! எனும் முடிவுக்கு வந்துவிட்டன. 
-    நரேந்திர மோடி (இந்திய பிரதமர்)
*    ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால் சில இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சத்தியமங்கலத்தில் தலைவர் பதவியை தி.மு.க. பிடித்துள்ளது. பதவிக்கு வந்து அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் வென்றாலும், நாம் தானே ஆளுங்கட்சி. நாம் பணம் கொடுத்தால்தான் அவங்க மக்கள் வேலையை செய்ய முடியும். நாம பணம் கொடுக்கலேன்னா எப்படி வேலை செய்வாங்க? சத்தி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் வராது.  தி.மு.க. தலைவர்களிடம் பணம் குறைவாகத்தான் கொடுப்போம். 
-    இப்படி அமைச்சர் கருப்பணன் கட்சி நிகழ்வில் பேசியதாக துரைமுருகன் குற்றச்சாட்டு. 

*    நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க.வுக்கு சென்றுவிடுவார் எனும் கருத்து நிலவுகிறது. அப்படி நடக்காது. அவர் கழுவும் மீனில் நழுவும் மீன். பா.ஜ.க. வலையில் சிக்கமாட்டார். அதேவேளையில் ஈ.வெ.ராமசாமி பற்றி விமர்சனம் வைத்த ரஜினி, பா.ஜ.க.வை சோ ராமசாமி விமர்சித்ததை பற்றி ஏன் பேசவில்லை?
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களில் பலர் இந்துக்கள்தான். மதச்சார்பற்ற நாடு எனும் பெருமையை நாம் இழந்து வருகிறோம். இதை பல நாடுகள் எச்சரித்துள்ளன, பல நாடுகளின் பத்திரிக்கைகள் கண்டித்துள்ளன. 
-    ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)

*    என் அரசியல் வாழ்வில் ஒன்பது தேர்தல்களை சந்தித்துள்ளேன். அதில் ஐந்து வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் கண்டேன். எந்த தேர்தலும் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம், தேர்தல் ஆணையத்தின் விருப்பம். ஓட்டுக்கு பணம் கொடுக்க வரும் நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் மாணவர்களே!
-    பன்வாரிலால் புரோஹித் (தமிழக கவர்னர்)

*    அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகர்கள் சிலர் உருவாகியுள்ளனர். அவர்கள் அந்த கட்சியின் செயல்திட்டங்களை வகுக்கின்றனர். எங்கிருந்தோ வந்து ‘அதை செய்! இதை செய்!’ என அரசியல் செய்யும் நிலைமை உருவாகிவிட்டது. விளம்பரத்துக்காக சமூக ஊடகங்களையும் கட்சிகள் பயன்படுத்துகின்றன. அவற்றில் வரும் தகவல்கள் பெரும்பாலும் பொய்யானவையே. 
-    சண்முகம் (தமிழக தலைமை செயலர்)

*    தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்ளும் கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் கூறுவதை ஏற்கக்கூடாது. தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் ஆகம விதிகளின்படிதான் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம். 
-    நாராயணன் (தமிழ்நாடு பிராமணர்கள் சங்க மாநில தலைவர்)

*    முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் தோழி சசிகலா கர்நாடக சிறையில் உள்ளார். அவர் சிறையிலிருந்து வந்தாலும், வராவிட்டாலும் எங்களைப் பொறுத்தவரையில் எந்த வித பாதிப்பும் கிடையாது. 
-    மாஃபா பாண்டியராஜன் (தமிழக அமைச்சர்)

*    மாநிலத்தின் கவர்னராக பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது புது அனுபவம். அந்த பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக நினைக்காமல், தமிழகம் - தெலுங்கானா மக்களின் உறவுப்பாலமாக கருதுகிறேன். கவர்னர் மாளிகை என்பது எளிதில் நெருங்க முடியாத கோட்டை என்பதை தகர்த்து, அனைத்து தரப்பினரும் சகஜமாக வரக்கூடிய இடமாக மாற்றியுள்ளேன். 
-    தமிழிசை சவுந்தர்ராஜன் (தெலுங்கானா கவர்னர்)

*    மக்கள் நலனுக்கு விரோதமான மத்திய - மாநில அரசுகளால் எத்தகைய ஆபத்து வந்தாலும், மொழிப்போர் தியாகிகளின் தியாக தீபங்களால் எழுப்பப்பட்ட, தி.மு.க., தமிழை, தமிழினத்தை, தமிழகத்தை எப்போதும் காக்கும். 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ‘இன்னும் இரண்டு அமாவாசைகளில் அ.தி.மு.க. ஆட்சி போய்விடும்’ என அ.தி.மு.க.வில் இருந்து ஓடிய முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று பல அமாவாசைகளை கடந்து முதல்வர் இ.பி.எஸ். ஆட்சி நடத்தி வருகிறார். அடுத்த சட்டசபை தேர்தலிலும் வெல்வோம். அதன் பின் அறுபது அமாவாசைகளை கடந்தும் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும். 
-    விஜயபாஸ்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்)