விளம்பரம் தேடும் நோக்கிலேயே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, வெங்காய விலை ஏற்ற விவகாரத்தில் தூங்குபவர்களை எழுப்பலாம் என்றும் தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்வது? என்ன செய்வது கேள்வி எழுப்பினார். 

அரசின் பசுமை பண்ணை கடைகளில் கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் மகாராஷ்டிராவில் மழை காலமாக இருப்பதால் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே வெங்காய விலை ஏறியுள்ளதாகவும் கூறினார். கடந்த காலங்களில் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ வெங்காய பதுக்கல் தமிழகத்தில் கிடையாது எனவும் அப்படி பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

 

தற்போது கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ஜனவரி மாதத்தில் கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் கூறினார். விளம்பரத்திற்காக ஆடிட்டர்  குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியதாகவும் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குறித்து நாங்கள் மரியாதையாக பேசுகிறோம் ஆனால்  முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஒருமையில் பேசிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

 

அதிமுகவை யாரும் வழிநடத்தவில்லை எனவும் ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் அதிமுகவை வழி நடத்துகிறார்கள் என்றார். அதிமுகவிற்கும், குரு மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக 3வது முறையாக ஆட்சியமைக்கும் அதிசயம் 2021ம் ஆண்டில் தமிழகத்தில் நடக்கும்  என்றார்.