உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விரும்பவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை என தெரிவித்தார். 

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக பதவிகளிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்ற வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் சமூக நீதியை குழித்தோண்டி புதைத்தது திமுகவினர் தான் எனவும் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு காரணம் ஜெயலலிதாவே என கூறிய அமைச்சர் ஜெயக்குமார் சமூக நீதி காத்த வீரங்கனை என ஜெயலலிதாவிற்கு திக தலைவர் வீரமணி பட்டம் வழங்கியதை திமுக தலைவர் முக ஸ்டாலின் மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பினார். எந்த திட்டத்தையும் செயல்படுத்தவிடாமல்  தமிழகத்தின் இம்சை அரசன்  முக ஸ்டாலின் தடுத்து வருவதகாவும் மத்திய அரசில் அங்கம் வகித்த போது வாய் கிழிய பேசியதை தவிர திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது என்றும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம் என கூறினார். 

\

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என கூறிய அமைச்சர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால்  பிடிபட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.பண்பாட்டின் அடிப்படையிலேயே மகாராஷ்ட்ராவில் ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்ற போது முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வாழ்த்து தெரிவித்தாகவும் இதில் என்ன தவறு என கேள்வி எழுப்பிய அவர் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு தேவையில்லை என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றார்.