அதிமுகவில் அமைச்சர்களுக்கு தொடர்ந்து திடீரென உடல்நலம் சரியில்லாமல் போவதும் எம்.பி.,க்கள் விபத்துகளில் சிக்குவதும் தொடர்ந்து வருவதால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சில நாட்களுக்கு முன் திண்டிவனம் மயிலம் பகுதியில் எம்.பி ராஜேந்திரனின் கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே எம்பி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.  

அடுத்து அரசு விழாவில் பங்கேற்பதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார் அதிமுக எம்.பி. காமராஜ். அப்போது வாழப்பாடி அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி  தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த அதிமுக எம்.பி.காமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அடுத்து வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் சீராகி வீடு திரும்பினார்.

 

இதனைத் தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக விழா நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதால் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை சரியானது. 

இவ்வாறு அடுத்தடுத்து அதிமுகவில் அமைச்சர்களும், எம்.பிக்களும் விபத்திலும், உடல் நலக்கோளாறாலும் பாதிக்கப்படுவது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.