நீலகிரியில் பாஜக சார்பில் நடந்த ‘நம்ம ஊரு பொங்கல் விழா’வில்  நடிகர் ராதாரவி பங்கேற்றார். இந்த விழாவுக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முழுமையான தேர்தலை முதன் முறையாக சந்திக்க உள்ளார். அதனால், கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். தேர்தல் காலத்தில் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுவது சகஜம்தான். அதுதான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது மட்டுமே தலைவர்கள் மக்களை சந்திப்பது என்பதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.

 
பாஜக நல்ல கட்சி என்பதாலும், இக்கட்சியில் எந்த பிரச்னைகளும் இல்லாததாலும் நடிகர்கள் பாஜகவை நோக்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் ஆகும். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா இல்லையா என்பதைது தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும். 
பாஜகவுக்கு சிறந்த தலைமையாக மோடி உள்ளார். பாஜக தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என்று ராதாரவி தெரிவித்தார்.