காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்  என அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் பேசியது வரவேற்கத்தக்கது எனவும் ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார் எனவும் அதிமுக எம்.பி குமார் தெரிவித்துள்ளார்.  

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யுமாறு கூறுவதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்  எனவும் ஆவேசமாக பேசினார். 

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்கு அரசியலமைப்பு சட்டம் எனவும் கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்  என அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் பேசியது வரவேற்கத்தக்கது எனவும் ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார் எனவும் அதிமுக எம்.பி குமார் தெரிவித்துள்ளார்.