அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக-பிரசாந்த் கிஷோரின் ஐபேக்கிற்குப் போட்டியாக அதிமுக டீமோஸ் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து 2021 தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், திமுக ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வியூகங்களை வகுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் வியூகம் வகுப்பதில் கைதேர்ந்த கார்ப்பரேட் நிறுவனரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ், அரசியல் கட்சிகளையும் முடக்கிப்போட்டுள்ளதால், மக்களைச் சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் ஓரளவுக்கு இளம் வாக்காளர்கள், பொதுமக்களை தொடர்புகொள்ள வழியிருப்பதால், தற்போது அரசியல் கட்சிகள் அந்த வழியில் களமிறங்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோரின் யோசனைப்படி ‘ஒண்றினைவோம் வா’ என்ற திட்டத்தை சமூக ஊடகங்கள் வழியாக திமுக முன்னெடுத்துவருகிறது. அடுத்த சில மாதங்களில் வாக்காளர்களைக் கவரும் வகையில் மேலும் பல திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் திமுக - பிரசாந்த் கிஷோரை ஆளும் அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு இடையே அதிமுக நேற்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்தமாக அதிமுகவில் 12 ஆயிரத்து 524  பேருடைய கிளைச் செயளாலர் பதவிகளை பறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர். மேலும் திமுக-ஐபேக்கிற்கு போட்டியாக அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியைத் தயார்படுத்தும் விதமாக, அதன் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும் அப்பொறுப்புகளில் இருந்து அதிமுக தலைமை விடுவித்தது.
மேலும் தகவல் தொழில்நுட்ப அணியை 4 மண்லடங்களாகப் பிரித்து 4 மண்டலங்களுக்கும் செயலர்களை அதிமுக தலைமை நியமித்தது. சென்னை மண்டலத்துக்கு அஸ்பயர் சுவாமிநாதன், வேலுார் மண்டலத்துக்கு கோவை சத்யன், கோவை மண்டலத்துக்கு ராமச்சந்திரன், மதுரை மண்டலத்துக்கு ராஜ்சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான துணைப் பதவிகள் விரைவில் ஒதுக்கப்படும் என்றும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.
அதிமுகவின் இந்த அதிரடி முடிவுக்கு காரணங்கள் குறித்து விசாரித்தால், திமுக - ஐபேக்கிற்குப் போட்டியாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. திமுக, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்குடன் கைகோர்தததுபோல அதிமுக டீமோஸ் (Demos Project Private Limited) என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தை நடத்துவது வேறு யாருமல்ல, திமுகவுடன் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிவந்த (ஓ.எம்.ஜி.) சுனில்தான் டீமோஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார் என்றும் கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோருடன் இந்த டீமோஸ் நிறுவனம் ஏற்கனவே இணைந்து செயல்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்த்த பிறகு டீமோஸ் நிறுவனம் கழற்றிவிடப்பட்டுள்ளதால், அந்நிறுவனம் அதிமுகவை அணுகியதாக தெரிகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்திலேயே இக்கட்சி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2021 தேர்தலை எதிர்கொள்ள முடிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 17 அன்று  எடப்பாடி பழனிச்சாமி 4-ம் ஆண்டில் முதல்வராக அடி எடுத்து வைத்ததையொட்டி டீமோஸ் நிறுவனம் சார்பில் வாழ்த்து அட்டை சமூக ஊடங்களில் பகிரப்பட்டன. தற்போது தமிழக அரசின் திட்டங்களை இந்நிறுவனம் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறது. தமிழக அரசின் திட்டங்களை சமூக ஊடங்களில் பகிரும்வண்ணம் அதிமுக டீமோஸ் நிறுவனம் இணைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் வியூகங்களுக்காகவும் டீமோஸுடன் அதிமுக இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் சிறகடிக்கின்றன.
பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக்குடன் திமுக இணைந்து செயல்படப்போவதாக  திமுக வெளிப்படையாக அறிவித்தத்தைபோல அதிமுக இதுவரை எதையும் அறிவிக்கவில்லை. திமுகவுடன் சுனில் பணியாற்றியபோதும், அதை திமுக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தற்போது அதிமுகவுடன் சுனில் இணைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதை அதிமுகவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இது சுனிலின் உத்திகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது டீமோஸ் நிறுவன யோசனைப்படி நடந்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் அதிரடியாக தகவல்கள் கசிகின்றன. தேர்தல் வேலையை அந்நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக பலமாக உள்ள பகுதிகளையும், சவாலான பகுதிகளையும் பிரித்து சமூக ஊடங்களில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப செயல்பட்டு மக்களை சென்றடையவே, தகவல் தொழில்நுட்ப அணி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் படபடக்கின்றன. கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்!