திண்டுக்கல், புதுக்கோட்டை என இரண்டு மாவட்டங்களில் மட்டும் தான் கூட்டணி தொடர்பாக பிரச்சனை எழுந்தது. அதிலும் பாஜக – அதிமுக இடையே தான் இந்த பிரச்சனை. இதற்கு காரணம் இரண்டு மாவட்டங்களிலும் கூடுதல் ஒன்றிய குழு உறுப்பினர்களை பாஜக கோரியது தான் என்கிறார்கள். அதிலும் கூட கடைசி நேரத்தில் தலைமை நேரடியாக தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட பாஜக மாவட்ட நிர்வாகிகள் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். அதே சமயம் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு சமமாக இடங்களை பகிர்ந்து கொடுத்து பிரச்சனை இல்லாமல் கூட்டணியை தொடர அதிமுக தலைமை ஆவண செய்துள்ளன. நேற்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பெரிய அளவில் கூட்டணி தொடர்பாக எங்கும் விவகாரங்கள் வெடிக்கவில்லை.

இதற்கு காரணம் ஜெயலலிதா பின்பற்றும் அதே டெக்னிக்கை ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டணி பின்பற்றியது தான் என்கிறார்கள். வழக்கமாக ஜெயலலிதா இருக்கும் போது கூட்டணி கட்சகிளுக்கு எத்தனை இடம், எந்தெந்த இடம் என்கிற முடிவோடு தான் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் இழுபறி நீடிக்கும் பட்சத்தில் தங்களுக்கு உறுதியாக்கப்பட்ட இடத்திற்கான வேட்பாளர்களை அறிவிப்பது ஜெயலலிதா ஸ்டைல்.

இப்படி ஒரு பக்கம் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டே மறுபுறம் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் இயல்பாகவே கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே சொன்ன இடங்களும் போய்விடுமோ என்கிற பதற்றம் வரும். இதனால் கொடுப்பதை கொடுங்கள் என்கிற முடிவுக்கு அந்த கட்சிகள் வந்துவிடுகின்றன. அதே பாணியில் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் பேச்சுவார்த்தை நிறைவடைந்த இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டு வந்தது.

மேலும் வேட்பு மனுத்தாக்கலுக்கும் குறைவான நாட்களே இருந்தன. இதனால் வேறு வழியில்லாமல் அதிமுகவின் வியூகத்திற்கு வழிவிட்டு கூட்டணி கட்சிகள் கொடுத்த இடங்களை பெற்றுக் கொண்டன. அதே சமயம் குறிப்பிட்ட சில இடங்களில் வெற்றியை உறுதியாக்கிக் கொடுப்பதாக கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக உறுதி அளித்திருப்பதால் இந்த ஒப்புதல் விரைவாக கிடைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.