அதிமுகவில் மூன்று எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தால், அது அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுக ஆட்சி அமைக்கவும் சாதகமாக மாறும் அம்சம் உள்ளது.
தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சியைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளை அதிமுக தலைமை தொடங்கியிருக்கிறது. 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் 10 தொகுதிகளுக்குக் குறைவாக அதிமுக வென்றால் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. தற்போதைய நிலையில் 114 உறுப்பினர்களின் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது.அதில் மூன்று பேர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளார்கள். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் எடப்பாடி அரசுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. 
இந்த 5 எம்.எல்.ஏ.க்களைக் கழித்துவிட்டால் அதிமுகவின் பலம் 109 ஆகக் குறையும். சபாநாயகர் பொதுவானவர் என்பதால், அவர் சட்டப்பேரவையில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் சேர மாட்டார். எனவே அவரையும் கழித்துவிட்டால் அதிமுக பலம் 108 ஆக குறைந்துவிடும். மே 23-க்கு பிறகு அதிமுகவுக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் எடப்பாடி பழனிச்சாமியால் ஆட்சியைத் தக்க வைக்க முடியும். 
இதனால், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 22 தொகுதிகளில் அதிமுக 10 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்நிலையில் ஒரு வேளை தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், சபை எண்ணிக்கை 231 ஆகக் குறையும். அப்போது அதிமுகவுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியதில்லை. மாறாக 8 தொகுதிகளில் வென்றால், எந்தச் சிக்கலும் இன்றி அதிமுகவால் ஆட்சியைத் தக்க வைக்க முடியும். மூன்று பேர் பதவி பறிப்பு மூலம் வெற்றி பெற வேண்டிய தொகுதி 2 குறையும் என்பதால், இவர்களின் பதவியைப் பறிக்க அதிமுக தலைமை முயற்சிப்பதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
ஒரு வேளை இந்த 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்தால், அது அதிமுகவுக்கு மட்டுமல்ல, மே 23-க்கு பிறகு ஆட்சி அமைக்கும் கனவில் உள்ள திமுகவுக்கும் சாதகமான அம்சம் உள்ளது. தற்போதைய நிலையில் சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 97 உறுப்பினர்களின் பலம் உள்ளது. 22 தொகுதி இடைத்தேர்தலில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்டப்பேரவையின் பலம் 231 ஆகக் குறையும். 116 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சி ஆட்சியில் இருக்கும்.
இதன்படி பார்த்தால், இடைத்தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் வெல்லத் தேவையில்லை. 19 தொகுதிகளில் வென்றால், 116 உறுப்பினர்களை பெற்றுவிடும். எனவே இந்தப் பதவி பறிப்பு மூலம் அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் சாதகமான அம்சம் உள்ளது. இவையெல்லாம் மூன்று எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்தால் மட்டுமே சாத்தியம். கட்சித் தாவல் சட்டத்தின்படி எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்புக்கு முன்பு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவையெல்லாம்  நடந்தால் மட்டுமே இதுவும் சாத்தியமாகும்!