கட்சியிலிருந்து நீக்கப்படாமல் கட்சியிலிருந்து ஒதுக்கப்படும் சூழ்நிலைக்கு அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ஆளாகியிருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்த நிலையில், அதையொட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிமுக தலைமை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர்  அழைக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் டிடிவி ஆதரவாளர்களாக இருந்ததால், அவர்களின் பதவியைப் பறிக்க தேர்தல் முடிந்தவுடன் அதிமுக முயற்சி மேற்கொண்டது.


அப்போதே அவர்கள் மூவரும், “ நாங்கள் அதிமுகவில்தான் இருக்கிறோம். அமமுகவில் உறுப்பினராக இல்லை” என்று தெரிவித்தார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரபுவும், கலைச்செல்வனும் அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. தேர்தல் முடிவுகளுக்கு முன்புவரை இந்த மூவரும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துருப்புச் சீட்டுகளாக இருப்பார்களோ என்ற எண்ணத்தில் அதிமுக தலைமை இருந்தது. ஆனால், இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்றதன் மூலம் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தவிர்த்து 119 உறுப்பினர்களை அதிமுக வைத்துள்ளது.

 
எனவே, இந்த எம்.எல்.ஏ.க்களால் ஆட்சிக்கு சிக்கலோ பாதிப்போ வரப்போவதில்லை என்று முடிவுக்கு அதிமுக தலைமை வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர்கள் மூவரும் அழைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி விரோத செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது ஒரு நடவடிக்கை. இன்னொன்று அவர்களை கட்சியை விட்டு நீக்குவது இன்னொரு நடவடிக்கை. இவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டதால், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தே எதுவும் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
அதேவேளையில் மூவரையும் கட்சியை விட்டு நீக்கலாம். அப்படி நீக்கினால், அவர்கள் மூவரும் எக்கட்சியையும் சாராதவர்களாக செயல்பட முடியும். சட்டப்பேரவையில் சுதந்திரமாக செயல்பட முடியும். ஆனால், திமுக - அதிமுகவுக்கான மெஜாரிட்டி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருப்பதால், மூவரையும் கட்சியை விட்டு நீக்கி, அவர்கள் எதிர்க்கட்சிகள் பக்கம் செல்ல அதிமுக விரும்பாது. அதேவேளையில் கட்சியிலும் முழுமையாக இணைத்துக்கொள்ளாமல் அவர்களை ஊசலாட்டத்தில் வைக்க முடியும். தற்போது அதிமுக தலைமை மூன்று எம்.எல்.ஏ. விவகாரத்தில் அப்படி ஒரு நிலையைத்தான் எடுத்திருப்பதாக தெரிகிறது. 
தங்களை அதிமுக கூட்டத்துக்கு அழைக்காதது பற்றி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி வெளிப்படையாகவே தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார். “எங்களுக்கு அதிமுகவிலிருந்து அழைப்பு வரும் எனக் காத்திருந்தோம்.  ஆனால், அழைக்கவில்லை. நாங்களும் அதிமுக தொண்டர்கள் தான். எல்லா  தொண்டர்களையும் தலைமை அரவணைத்து செல்ல வேண்டும்.  எனக்கும்  டிடிவி. தினகரனுக்கும் அரசியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் தேவையில்லை  என்று முடிவு செய்துவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

 
 சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெற வைக்க திமுக தலைமை வியூகம் வகுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், மூன்று எம்.எல்.ஏ.க்களையும் ஒரேடியாக புறக்கணிக்க அதிமுக முன்வராது என்பதே நிதர்சனம். ஆனால், 2011 - 16 காலத்தில் தேமுதிகவிலிருந்து அதிமுகவுக்கு தாவிய எம்.எல்.ஏ.க்கள் தேமுதிக எம்.எல்.ஏ.க்களாகவே செயல்பட்டதைப்போல, அவர்களை அதிமுக உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு கட்சிக்குள் வேண்டா வெறுப்பாக வைத்துக்கொள்ளலாம் அல்லது மூவர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின்படியும் செயல்படலாம். எதுவாக இருந்தாலும் தற்போதைக்கு மூவர் விவகாரத்தில் சாய்ஸ் அதிமுக தலைமை பக்கமே!