ஆப்படிக்க காத்திருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்? உளவுத்துறை ரிப்போர்ட்டால் முடிவை மாற்றிய எடப்பாடி!!
பழைய பகையை மனதில் வைத்து ரிவெஞ் எடுத்தால் என்ன செய்வது? வரப்போகும் தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிமுக கூறியுள்ளது.
கடந்த 2003- ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பெரும்பாலும் போராட்டங்களை வெறுக்கும் குணம் கொண்ட ஜெயலலிதாவும் இந்த போராட்டங்களை வெறுத்தார். அதோடு போராட்டக்காரர்களை கைது செய்யவும் அதிரடி உத்தரவிட்டார். விளைவு காவல்துறை நள்ளிரவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளில் புகுந்தது. போராட்ட களத்தில் நின்றவர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டனர்.
பேருந்துகளை மறித்தல், எரிக்க முயற்சித்தல், பெண் அலுவலர்களின் மீது அத்து மீறி நடத்தல் பணிக்கு செல்பவர்களை தடுத்தல், அரசு உடமைகளை சேதப்படுத்துதல், தகாத வார்த்தைகளால் வசைபாடுதல் " பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற குற்றசாட்டுகள் கூறப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேரை பணியிலிருந்தும் தூக்கியடித்தார் ஜெயலலிதா. இந்த மெகா கைதால் தமிழகத்தில் உள்ள சிறைகள் நிரம்பி வழிந்தன. போராடியவர்கள் அத்தனை பெரும் 3.7.2003 வரை எஸ்மா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அரசு அந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து அதை டெஸ்மா என மாற்றியது. அப்போது போராடியவர்களில் 88 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவு 2004 –ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் முகத்திரையை மரணக் கிழி கிழித்திருந்தார்.
‘‘அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி தாறுமாறாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அனால் இந்த போராட்டங்கள் அரசால் ஒடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கு பெற்ற 28 கல்லூரி ஆசிரியர்கள் பல ஊர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இது ஆசிரியர்களிடையே பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருள்ளதால், இவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் கடந்த 2004 ல் அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்பது உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு தலைமையில் நடைபெற்ற தேர்தல் குரித்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் முழு நேர பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பதிலாக வேறு பணியில் உள்ள அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இது ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியதாம். ஆனால், இதற்கு விளக்கமளித்துள்ள ஜெயராமன் இதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.