விசா விதிமிறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறார் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் தப்லீக் ஜமாத்தினரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தழிழக அரசுக்கு மாஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- விசா விதிமிறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறார் முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதுவரை அவர்களை பள்ளிவாசல்களில் தங்க அனுமதிக்க வேண்டும்  என்றும்  மனித நேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களை ஹஜ் இல்லத்தில் தங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. கொரனாவுக்கு முன்பாக வெளிநாடுகளிலிருந்து ஆன்மீக பயணமாக தமிழகம் வந்திருந்த தப்லீக் ஜமாஅத் பயணிகள் விசா விதிமீறல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு பிறகு அவர்கள்  ஜாமீன் பெற்றுள்ளனர். பிரான்ஸ், இந்தோனேஷியா,மலேஷியா, தாய்லாந்து , புருனே, எதியோப்பியா, பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த 129 பேர் அதில் உள்ளனர். அதில் 12 பெண்களும் அடங்குவர்.

இந்நிலையில், இதே போன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தப்லிக் ஜமாஅத்தினரை மஹாராஷ்டிரா சிவசேனை அரசு, அவர்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களிடம்   ஒப்படைத்து விட்டது. கர்நாடக பாஜக அரசு அவர்களை ஹஜ் இல்லத்திலும், தெலுங்கானா மாநில அரசு  பள்ளிவாசல்களிலும், டெல்லி மாநில அரசு சிறப்பு விடுதிகளிலும்  தங்க வைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, அவர்கள் ஜாமீன் பெற்று வந்தும், சிறார் சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். என்பதை சுட்டிக் காட்டிய மனிதநேய ஜனநாயக கட்சி, இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு ஜாமீன் பெற்றுள்ள தப்லீக்கினரை மதரஸா அல்லது தனியார் கல்லூரியில் தங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மஹாராஷ்டிர சிவசேனை அரசு செய்தது போல அவர்களின் வழக்குகளை முடித்து வைத்து  அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் அவர்களை  ஒப்படைத்திட  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர்கள் அனைவரையும், சென்னையில் உள்ள ஹஜ் இல்லத்தில் தங்கிட அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தியை, அதிகாரிகள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், இதற்காக அவருக்கும், தமிழக  அரசுக்கும்  நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அந்தந்த நாட்டு தூதர்களிடம் இவர்களை சட்டப்படி ஒப்படைக்கும் பணியை செய்வதாகவும் தலைமைச் செயலாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இது தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு நல்கிய திரு.செந்தில் IAS, திரு.விஜயகுமார் IAS, திரு. சித்திக் IAS ஆகியோருக்கும் மஜக சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்சாரி நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.இன்று மாலை  அவர்கள் அனைவரும் ஹஜ் இல்லம் வந்திட ஏற்பாடு நடந்து வருவது குறிப்பிடதக்கது. இது தொடர்பாக பல தலைவர்கள் அறிக்கைகள் மூலம் அரசுக்கு கவனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் அன்சாரி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.