ADMK godfather is dinakaran only and he is the next CM
அதிமுகவை உருவாக்கியது எம்.ஜி.ஆராக இருக்கலாம்; அதனை வளர்த்தெடுத்தது ஜெயலலிதாவாக இருக்கலாம்; ஆனால், இப்போது அதிமுக வின் காட்பாதராக இருப்பவர் தினகரன் மட்டுமே" என்று மகிழ்ச்சியில் திளைக்கிறது அவர் தரப்பு. அதற்கேற்பவே, அவரும் புன்னகை மாறாமல் தன்னை நோக்கி வெளிச்சம் பாய்ச்சும் கேமிராக்களை நோக்கி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா மறைந்தபோது, சசிவின் ஆசிபெற்றவராக ஆட்சிபீடத்தில் அமர்ந்தார் பன்னீர். அப்போதே, எடப்பாடி அந்த வாய்ப்பை தவறவிட்டதாகப் பேச்சு எழுந்தது.
சசிகலாவின் கையசைவுக்குள் எல்லாமே இருந்தது போன்ற தோற்றத்தை தந்தது அதிமுக வின் செயல்பாடுகள். அதன்பின், அந்த தோற்றம் மெல்ல மங்கியது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பே, அ.தி.மு.க. கூடாரத்தில் ஓ.பி.எஸ். தனி ஆவர்த்தனம் செய்துவந்தது வெளிப்படையாகத் தென்பட்டது. அதன்பிறகு, அவர் முதல்வர் பாதையை ராஜினாமா செய்ததும், அது தன்னை வற்புறுத்திப் பெறப்பட்டதாகச் சொன்னதும் தமிழ்நாடு அறிந்தது தான்.
அதன் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ். பக்கம் உடனடியாக அணிவகுத்தனர் சில எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும். அவருக்கு எதிராக, சசிகலா தரப்பில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர் என்பதே, அப்போது எல்லோருடைய கேள்வியாகவும் இருந்தது.
சசிகலா சிறைக்கு சென்றபோது, தனது பீடத்தில் தினகரனை அமரவைத்தார். அவரது கண்ணசைவில், எடப்பாடியின் செயல்பாடுகள் இருக்கும் என்றே அதிமுக வினரின் ஒரே எண்ணமாக இருந்தது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரையிலும், அந்த நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதன்பின், எல்லாமே மாறும் என்பதே அதிமுக வின் நிலைமையாகி விட்டது.
கடந்த ஏப்ரல் மாதம், எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஓ.பி.எஸ். அணியினர் இணைவார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியது.

ஒரு வகையில், அதனை ஆரம்பித்து வைத்தவர் தினகரன் தான். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நீள, அதற்குள் இலைக்காக சிறைக்கு சென்ற தினகரன் இதோ, இந்த ஜூன் மாதம் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.
உடனே, அவரது ஆதரவாளர்களும் உற்சாமாகி விட்டனர். வந்ததும் வராததுமாக, தன் பங்குக்கு தமிழக அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார்.
நேற்று முன்தினம் முதல் தற்போது வரை, அவர் பக்கம் சாயும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அ.தி.மு.க. கரை வேட்டிகளை 'லபக்'கிய பிறகு, மீண்டும் முதலில் இருந்து கணக்கைத் தொடங்கியிருக்கிறார் தினகரன்.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தினகரன் பக்கம் இருப்பதாகவே தற்போது பேச்சு கிளம்பியிருக்கிறது.
இதன் பின்னாலிருக்கும் காரணம், பணம். "தினகரன் போன்று ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ செலவு செய்ய முடியாது; ஆர்.கே.நகர் தொகுதியில் செய்த செலவு ஒன்றே போதும்; இதனைத் தனியாக சொல்லவேண்டியதில்லை. கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்தது, கோட்டைக்குள் நுழைந்தவர்களுக்கு தெரியாதா?" என்று வெளிப்படையாகவே சொல்கின்றனராம் அ.தி.மு.க. தொண்டர்கள்.
'எல்லோரும் தினகரன் பக்கம் வந்தபிறகு, அமைச்சர்களுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் வேறு வாய்ப்பு கிடையாது. அதனால், அடுத்த சி.எம். தினகரன்தான்' என்ற பேச்சு பலமாகவே அ.தி.மு.க.வினர் மத்தியில் ஒலிக்கிறது. சுழற்றியடிக்கும் கேள்விகளுக்கே புன்னகைக்கும் தினகரன், இதனைக் கேட்டபோது புன்னகையை சிந்தியிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?!
