ஆறு, ஏரி மற்றும் குளங்களில் தூர் வார ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாயில் ஊழல் நடைபெற்றதாக கூறி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தினகரன்,  நம்ம ஊருக்கு வந்து என்னை துரோகி என்று சொல்கிறார் ஓபிஎஸ், ஆனால் துரோகத்துக்கு ஒரு எம்பலம் போட்டால் அதற்கு ஓபிஎஸ் படத்தைத்தான் வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பதவியை மிரட்டி என்னிடம் இருந்து எழுதி வாங்கினார்கள் என ஓபிஎஸ் நேற்று பேசியிருக்கிறார். இப்படி சொல்வதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு ஆண் மகன் இப்படி பேசலாமா? என கிண்டல் செய்தார்.

அதனால்தான் குருமூர்த்தி  ஓபிஎஸ் மற்றும் , இபிஎஸ்ஐ இம்போடெண்ட் என குறிப்பிட்டாரா? என கேள்வி எழுப்பினார். தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசின் உத்தரவுக்காக காத்திருந்து  தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்றும், அதிமுகவின் பொதுச் செயலாளராக குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார் எனவும் தினகரன் தெரிவித்தார்.

எனக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடுவேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். முடிந்தால் எந்த  ஆதாரம் வேண்டுமானால் அவர் வெளியிடட்டும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தற்போது பருப்பு,முட்டை என ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக குற்றம் சாட்டினார். அதிமுகவின் பொதுச் செயலாளராக குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார் என டி.டி.வி.தினகரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.