முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் அதிமுகவின் பொதுக் குழுவை கூட்ட முடியுமா என கேள்வி எழுப்பிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், விரைவில் தங்கள் அணி சார்பில் தினகரன் தலைமையில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் இடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வருகிறது. எப்படியாவது ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற வேண்டும் என இரு தரப்பினரும் முட்டி மோதி வருகின்றனர்.

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும் , துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனையும் நீக்குவதற்கான நடவடிக்கையாக வரும் 12 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம்  பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், அதிமுகவில் 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலோனோர், தங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் எனவும்  தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் அதிமுகவின் பொதுக் குழுவை கூட்ட முடியுமா என கேள்வி எழுப்பிய திவாகரன், விரைவில் தங்கள் அணி சார்பில் தினகரன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.