தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான படுதோல்வி அடைந்தது. கோவை உள்ளிட்ட எந்தவொரு மாநகராட்சியையும் அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. அதேபோல 138 நகராட்சிகளில் வெறும் மூன்றையும், 490 பேரூராட்சிகளில் 15ஐ மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாநகராட்சிகளில் 164 வார்டுகள், நகராட்சிகளில் 638 வார்டுகள், பேரூராட்சிகளில் 1206 வார்டுகளில் மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. கடந்த ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக இதேபோல படுதோல்வியைச் சந்தித்து இருந்தது.

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வசிக்கும் வார்டுகளில் கூட அதிமுக தோல்வி அடைந்துள்ளதால் தலைவர்களை போல் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், அதிமுகவை காப்பாற்ற சசிகலா வர வேண்டும் என்றும் தொண்டர்கள் இடையே கதறல்கள் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள் சென்னையில் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முகமதுெஷரீப். முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர். தற்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக உள்ளார். முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் தீவிர விசுவாசியாக இருந்தவர். உட்கட்சி பிரச்னை காரணமாக முன்னாள் அமைச்சரிடம் இருந்து ஒதுங்கி அரசியல் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடந்த ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவில் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முகமது ஷெரிப், முன்னாள் நகர செயலாளர் சேகர், பேச்சாளர் தம்பி ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர் சங்கர், சிறுபான்மை பிரிவு மஸ்தான் ஆகியோர், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து, அதிமுகவிற்கு ஒற்றை தலைமை ஏற்க வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 

முன்னதாக சசிகலாவிற்கு அவரது இல்லத்தில் திண்டிவனம் அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்துகொடுத்து ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு ஆதரவாக அரசியல் செய்து வந்த திண்டிவனம் பிரமுகர்கள், சசிகலாவிற்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ள சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.