நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை  வரும் மார்ச்ச மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க உள்ளது. இதையடுத்து  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை  ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு செய்யவும் குழு அமைத்து இருக்கிறது. மேலும் பிரசார குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவையும் அமைத்துள்ளது.

அடுத்தகட்டமாக, தொண்டர்களிடம் இருந்து விருப்பமனு வாங்கும் பணியையும் அ.தி.மு.க. தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது..

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற பொது தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற தொண்டர்கள், தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம். விருப்ப மனுக்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, அங்கே செலுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டது. அங்கு வேட்பாளர்கள் கூட இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.