நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்கள் நாலாதிசையிலும் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க.வின் வலதள தொழில்நுட்பப்பிரிவு, ஒவ்வொரு வேட்பாளரையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே போன் செய்து ஓட்டுக்கேட்பது போல் ஒரு அடேங்கப்பா ஐடியாவை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்துக்கு தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் இப்போதே தொடங்கிவிட்டது. வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சித் தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட குரல் மூலம், வாக்காளர்களின் கைபேசி எண்ணில் பிரச்சாரம் செய்வார்கள். இதை ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர், அதிக அளவில் பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். ஜெயலலிதா மறைந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலின்போதும் இதே முறை பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அதே பிரச்சார யுக்தி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களின் கைபேசி எண்ணுக்கு வரும் ஜெயலலிதா குரல் பிரச்சார ஆடியோவில், சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணுக்குரியவரின் பெயரை அழைத்து, அவரிடம் வாக்கு கேட்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு இந்த பிரச்சார குரல் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் குரலைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு கேட்குதா? என்ற வடிவேலுவின் டயலாக் ஞாபகம் வருகிறதா?