கழகங்களில் இது ‘இலவச கல்யாண காலம்’ போல! தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு இலவச திருமணங்களை நடத்தி வைக்க இருக்கின்றன. 

வரும் 24 மற்றும் 25 தேதிகளில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை எனுமிடத்தில் இரண்டு நாட்கள் மண்டல மாநாடை நடத்துகிறது தி.மு.க. சரிந்து கிடக்கும் கழகத்தை எழுச்சியுற செய்வதற்காக இந்த மாநாட்டை மிகவும் எதிர்பார்ப்புடன் நடத்த இருக்கிறார் ஸ்டாலின். 

சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடத்தப்பட இருக்கும் இந்த மாநாடு முடிந்ததும் மறுநாள் திங்கட் கிழமையன்று அதே மாநாட்டு பந்தலில் தன் தலைமையில் இலவச திருமணங்களை நடத்திட இருக்கிறார் ஸ்டாலின். இரு நாட்கள் மாநாடுக்காக கழகத்தினர் வந்து ஈரோட்டில் டேரா போட்டுவிட்டு, மாநாடு முடிந்ததும் அவரவர் ஊரை நோக்கி திங்கட்கிழமை பிழைப்பை பார்க்க கிளம்பிவிடுவார்கள். ஆக மறுநாள் திங்கட்கிழமையன்று ஸ்டாலின் நடத்தும் இலவச திருமண நிகழ்வுக்கு எங்கிருந்து பார்வையாளர்களை பிடிப்பது? என்று  மண்டை காய்ந்து கிடக்கிறது அக்கட்சி. 

ஆனாலும் தி.மு.க. நடத்தும் இலவச திருமண நிகழ்ச்சிக்கான பணிகள் ஜெட் வேகத்தில் மாநாட்டு வேலையோடு இணைந்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

தி.மு.க. இப்படியொரு எழுச்சி மாநாட்டை நடத்தும்போது ஆளுங்கட்சி ச்சும்மா இருக்குமா? இதோ வேலுமணி தலைமையில் கிளம்பிவிட்டது ஆளுங்கட்சி படை. அதே கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயமுத்தூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இலவச திருமணத்தை மெகா பிரம்மாண்டத்துடன் நடத்துகிறார். 
அதுவும் இந்த நிகழ்வினை தனது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் இரு முதல்வர்களையும் அழைத்து நடத்துகிறார்.

வேலுமணி எப்பவுமே தனது தொகுதியை தன் கைக்குள் வைத்துக் கொள்வதில் கில்லாடி பேர்வழி. ஆளும் அ.தி.மு.க. மக்கள் மத்தியில் கடும் சச்சரவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியை வைத்து தொகுதி மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்கான சூட்சமங்களை துவக்கியிருக்கிறார் வேலுமணி. 
அதன்படி இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை தொகுதி முழுக்க ஒவ்வொரு வீடாக கொண்டு சென்று தாம்பூல தட்டில் வைத்து தருகிறார்களாம். 

ஆக  தாங்கள் நடத்தும் இலவச திருமண மேடைகளில் ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க, எடப்பாடி அட்சதையை தூவ என்று இரு கழகங்களும் நடத்த இருக்கும் இந்த ‘மங்கள’ அரசியல் மெர்சல்தான் போங்கோ!