கோஷ்டிப் பூசலை கைவிட்டு தேர்தலுக்கு தயாராகுங்கள் என அதிமுக  நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர் .  நடந்து முடிந்த உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை .  இன்னும் 148 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில்  வரும்  ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது . 

அதில் அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டிய நிர்பந்தம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.    மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு செய்து   பின்னர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.   இந்நிலையில் கடந்த 10ம் தேதி அதிமுக தலைமை  அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் 15ஆம் தேதி வரை நடைபெற்றது .   கடந்த 4 நாட்களாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட  செயலாளர்கள் மீது மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர் . 

கட்சி நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதுடன் , கட்சிக்குள் கடுமையான கோஷ்டிப் பூசல் இருப்பதாக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் நிதானமாக கேட்டனர்.  பின்னர்  அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கிய அவர்கள்,   அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி பூசலை மறந்து  கட்சியின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள் ,   விரைவில் வர உள்ள  தேர்தலில் களத்தில் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வாருங்கள்  என அழைப்பு விடுத்துள்ளனர் .