முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமையகத்தில் சுமார் 2 மணி நேரம் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடியை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தால் தான் மக்கள் மனதில் எடுபடும் என்று அப்போது கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை மாற்றுவது என்பது அதிமுக அரசின் தோல்வியை நாமே ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மணி நேர ஆலோசனையின் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டத்திற்கு பிறகு அதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேராக துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை சென்று சந்தித்ததாக கூறுகிறார்கள். கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய விஷயங்களை அவர் ஓபிஎஸ்சிடம் எடுத்துரைத்ததாகவும் சொல்கிறார்கள். முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி தரப்பு அவசரம் காட்டுவதாகவும், இந்த விவகாரத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடியை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் ஓபிஎஸ்சிடம் எடுத்துரைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஏ ற்படும் தாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். மீண்டும் அவரே முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் ஒட்டு மொத்தமாக அனைவரும் அவர் பின்னால் அணிவகுப்பார்கள். இது தேர்தலுக்கு பிறகு அவரை ஒரு தலைவராக அடையாளப்படுத்திவிடும் என்று ஓபிஎஸ் கருதுவதாக சொல்கிறார்கள். மேலும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி அதிமுகவை யார் வழிநடத்துவது என்பது தான் தற்போது முக்கியம் என்று அவர் நினைப்பதாகவும் கூறுகிறார்கள்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற உயர் பதவியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சால் எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. அனைத்து கட்சி தொடர்பான முடிவுகளிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தேவைப்படுகிறது. அதே சமயம் ஆட்சி தொடர்பான முடிவுகளில் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி தன்னை அறிவித்துக் கொண்டாலும் கட்சியிலும் அவர் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க கூடும் என்று ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறது.

எனவே முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தன்னிச்சையாக முடிவெடுப்பதை தடுக்கவும் தயாராகி வருகிறது ஓபிஎஸ் தரப்பு. அதன் வெளிப்பாடு தான் நேற்று இரவு ஓபிஎஸ் வெளியிட்ட ட்வீட் என்கிறார்கள். முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அந்த ட்வீட்டில் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கூற விரும்புவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம், பொறுப்புணர்வு தேவை என்பது தான்.

 அதாவது எடப்பாடி பழனிசாமி தரப்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில் அது பொறுப்பில்லாத தனம் என்றும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அவர் கூறியிருப்பது கட்சியில் அனைவரையும் கலந்து பேசி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்பதைத்தான் என்று கூறுகிறார்கள்.