திமுகவை தொடர்ந்து இனி கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க மாட்டோம் என்றும் அதிமுகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து லாரியில் சிக்கி சுபஸ்ரீ (23) என்ற இளம்பெண் கடந்த மாதம் 12 அன்று பலியானார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய. இச்சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை எடுத்து கொண்டசென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பேனர் வைப்பது தொடர்பாக கடுமையான உத்தரவுகளையும் அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்தது.


அதன் ஒரு பகுதியாக வழக்கு விசாரணையில் இருந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட்  வைத்தால், அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன்.  மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் இதையே பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்தது. திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தததையடுத்து பிற கட்சிகளும் இதைப்போல பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். 


சுபஸ்ரீ மரணம் நிகழ்ந்து 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே சுபஸ்ரீயின் மரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவருடைய தந்தை ரவி தொடர்ந்த வழக்கு நவம்பர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.