நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. அவை கூடியதுமே அதிமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

மக்களவை கூடியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு தனி அந்தஸ்து அளிக்கும் விவகாரம் ஆகிய பிரச்சனைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. மக்களவையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி எம்பிக்கள், ரூ.12,600 கோடிக்கும் மேலாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டனர் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில், அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால் மதியம் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அப்போதும் அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் எம்பிக்கள்  அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.