தே.மு.தி.கவிற்கு திடீரென மவுசு கூடி இரண்டு பிரதான கட்சிகளும் கூட்டணிக்குள் இழுக்க விரும்புவதற்கான காரணம் வாக்கு வங்கி தான் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அரசியல் கட்சியை துவங்கிய கேப்டன், 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கி 10 விழுக்காடு வாக்குகளை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க வேட்பாளர்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றனர். பின்னர் நடைபெற்ற 2009 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வங்கி 15 சதவீதத்தை நெருங்கியது. இந்த நிலையில் தான் 2011 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவிடம் கெஞ்சி கூத்தாடு அ.தி.மு.க கூட்டணி வைத்தது.

அதன் பிறகு தான் தே.மு.தி.கவிற்கு அழிவு காலம் ஆரம்பமானது. இடைத்தேர்தல்களில் தனித்து களம் இறங்கிய நிலையில் 10 விழுக்காடு வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கியை எப்போதுமே தே.மு.தி.க தக்க வைத்து வந்தது. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – பா.ம.க – ம.தி.மு.க கூட்டணியில் களம் இறங்கிய தே.மு.தி.கவிற்கு பலத்த அடி கிடைத்தது. வாக்கு வங்கி பாதியாக குறைந்தது.

இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி அதள பாதாளத்திற்கு சென்றது. ஆனாலும் கூட தே.மு.தி.கவின் ஆரம்ப கால தொண்டர்கள், கேப்டன் ரசிகர்கள் தற்போதும் அவர் மீதான அபிமானத்தில் உள்ளனர். எனவே எத்தனை தோல்விகள் வந்தாலும் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி என்பது தற்போதைக்கு 5 சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தி.மு.கவின் ஐ.டி விங்க் நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வில் கூட விஜயகாந்திற்கு நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் 5 சதவீத வாக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு விஜயகாந்த் வேட்பாளரை நிறுத்தினால் குறைந்தது 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வரை வாங்குவார் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்தே தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடங்கியது.

இதே நேரத்தில் பா.ஜ.கவும் கூட விஜயகாந்தின் வாக்கு வங்கி என்பது கடைசி நேரத்தில் உதவும் என்று கருதி தான் அந்த கட்சியை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியலை பொறுத்தவரை இரு பெரும் ஆளுமைகளான கலைஞர், ஜெயலலிதா இல்லாமல் எதிர்கொள்ளப்போகும் முதல் பொதுத் தேர்தலாக 2019 மக்களவை தேர்தல் உள்ளது. எனவே இந்த தேர்தலில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கலாம்.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 5 சதவீதத்திற்கு குறையாத வாக்கு வங்கி உள்ள தே.மு.தி.கவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆர்வம் காட்டி வருகிறது.