திருச்சி பொன்மலைப்பட்டியில் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான மதில் சுவர் உள்ளது. அதன் எதிரே தி.மு.க.வின் பொன்மலை பகுதி கிளை அலுவலகம் உள்ளது. தி.மு.க.வினர் ரெயில்வே மதில் சுவரில் கட்சி விளம்பர சுவரொட்டி ஒட்டியிருந்தனர். மற்றும் சுவர் அருகில் கொடிக்கம்பமும் நட்டு இருந்தனர்.

இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி. குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு முடிவெடுத்தார். அதற்காக தி.மு.க. வினர் பயன்படுத்திய மதில் சுவரை பொக்லைன் எந்திரம் கொண்டு நேற்று பிற்பகல் குமார் எம்.பி. மேற்பார்வையில் அ.தி.மு.க.வினர் இடித்து தள்ளினர்.

அப்போது தி.மு.க. பகுதி செயலாளரான தர்மராஜின் அண்ணன் பெரியசாமி, ஏன் அதை இடிக்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். அவரிடம் குமார் எம்.பி., அதை கேட்க நீ யார்? எனக்கூறி பெரியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை காட்டுத்தீ போல பரவ அங்கு ஏராளமான தி.மு.க.வினரும் திரண்டனர்.

பெரியசாமி தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் கோபி மிகவும் ஆவேசம் அடைந்தார். சற்றும் எதிர்பாராத வேளையில் குமார் எம்.பி.யின் அருகில் சென்ற கோபி, அவரது கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். எம்.பி.யை தாக்கிவிட்டதை அறிந்த அதிமுகவினர் மற்றும் குமார் எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு உருட்டு கட்டைகளுடன் திரண்டு வந்து திமுகவினரை சரமாரியாக தாக்கினர். 
பதிலுக்கு தி.மு.க.வினரும் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக்கொண்டனர்.
அங்கும், இங்கும் அதிமுகவினரும் திமுகவினரும்  ஓடி ஓடி தாக்கியதில் அப்பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது. அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதே நேரத்தில் குமார் எம்.பி.யை பாதுகாப்பாக அதிமுகவினரே அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள், அ.தி.மு.க.-தி.மு.க.வினரை கூட்டம் கூடாமல் துரத்தினார்கள். அப்போது போலீசாரின் முன்னிலையிலேயே பொன்மலை பகுதி தி.மு.க. அலுவலகத்தை அ.தி.மு. க.வினர் சூறையாடினார்கள். ஆனால் அதை போலீசார் தடுக்கவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே மோதல் தொடர்பாக தி.மு.க. பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் மற்றும் கோபி, பிரபாகரன் உள்ளிட்ட தி.மு.க.வினரை பொன்மலை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். குமார் எம்.பி. தாக்கியதால் காயம் அடைந்த பெரியசாமி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டது.

மோதல் தொடர்பாக பொன்மலை போலீசில் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.