இரண்டு சந்திப்பின் போதும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று நடைபெறவிருந்த அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டு, தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாஜக, தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. 

தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் நிறைவடைந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு 20 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக கறார் காட்டி வந்தது. அதன் பின்னர் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளான அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு சந்திப்பின் போதும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று நடைபெறவிருந்த அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் தேமுதிக கொடுத்த இரண்டு ஆப்ஷன்களையும் அதிமுக ஏற்க மறுத்தது தான் எனக்கூறப்படுகிறது. அதாவது பாமகவிற்கு ஒதுக்கியதைப் போல் தங்களுக்கும் 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும், இல்லையெல் 20 தொகுதிகளுடன் சேர்த்து ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் தர வேண்டும் என்பது தான் அந்த ஆப்ஷனாம். ஆனால் ஏற்கனவே பாஜகவிற்கு கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேமுதிகவின் கோரிக்கைகள் எந்த வகையிலும் ஈடேறாது என்பதால் தான் கூட்டணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.