திராவிடம் என்று பேசி வந்த கருணாநிதி பெயரிலேயே கருணா என்ற சமஸ்கிருத சொல் உள்ளது. கருணாநிதி பெயரில் உள்ள நிதி என்று சொல்லும் சமஸ்கிருத வார்த்தைதான். 

ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது, அதற்கு வாய்ப்பே இல்லை என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீகால சாந்தி வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் சுப்ரமணியன் சாமி, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுப்ரமணியன் சுவாமி பேசும் போது, “ திராவிடம் என்று பேசி வந்த கருணாநிதி பெயரிலேயே கருணா என்ற சமஸ்கிருத சொல் உள்ளது. கருணாநிதி பெயரில் உள்ள நிதி என்று சொல்லும் சமஸ்கிருத வார்த்தைதான். திமுகவின் சின்னமான உதயசூரியன் என்ற சொல்லும் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது” என்று சுப்ரமணியன் சாமி பேசினார். 

 நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வந்த சுப்ரமணியன் சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. அது முடிவுக்கு வந்துவிட்டது. ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை தொடங்குவோம் என பேசி வருகிறார்கள். யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. இதற்கு முன்பு என்னுடைய முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக் கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்தேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு வருகிற 22- ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. எனவேம் சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. அது முடிந்துவிட்டது” என்று சுப்ரமணியன் சாமி தெரிவித்தார். அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்குமா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சுப்ரமணியன் சாமி, “அதெல்லாம் நடைபெற வாய்ப்பில்லை, நடக்காது” என்று பதில் அளித்தார். மத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ நடத்த தயார் என்று நேற்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் 2024-இல் நடக்கும் என்று பேசி வருகிறார்கள். ஆனால், அதற்கு மாறாக சுப்ரமணியன் சாமி பேசியிருக்கிறார்.