தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி என்பது ஓரளவுக்கு முடிவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். தற்போது யார் ? யாருக்கு ? எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிகள் என்பது குறித்து மூத்த அமைச்சர்கள் இருவர், டெல்லியில் உள்ள பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த 3 ஆம் தேதி டெல்லி சென்ற அந்த அமைச்சர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.

ஆனால் பாஜக தலைவர்கள் தங்கள் தரப்பு  வேட்பாளர்கள் பட்டியலை தயாராக வைத்துக் கொண்டு, இந்த, இந்த  தொகுதிகள்தான்  வேண்டும் அடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.' முதல்கட்ட பேச்சின்போது குறிப்பிட்ட சில தொகுதிகள் வேண்டும்' என பாஜக ., கூறியிருந்தது. அந்த தொகுதிகளை விட்டு தர முடியாது என கூறிவிட்டு வந்தனர்.

திருநெல்வேலியை, நயினார் நாகேந்திரன் மற்றும் தேவநாதன் ஆகியோருக்காக, பாஜக கேட்கிறது. அதேபோல, முன்னாள், எம்.பி., கார்வேந்தன் போட்டியிடுவதற்காக திண்டுக்கல்லை, பாஜக கேட்கிறது. அண்டை மாநிலத்தில் அரசியலமைப்பு சட்ட பதவியில் உள்ளவரின் தீவிர சிபாரிசுடன் வலியுறுத்துவதால், இதிலும், அதிமுக திணறி வருகிறது..

தென் சென்னை. தமிழக, பாஜக தலைவர் தமிழிசை உட்பட, தமிழக, பாஜகவினருக்காக  கேட்கிறது. ஆனால், மீன்வளத் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய தலைவருமான, ஜெயகுமார் மகனான, ஜெயவர்த்தனின் தொகுதி அது. எனவே, 'அதை தரமுடியாது' என்கிறது, அ.தி.மு.க.
அதேபோல, திருவள்ளூர் தொகுதி. இது அதிமுகவின் பார்லிமென்ட் கட்சித் தலைவரும், அடுத்தடுத்து அத்தொகுதியில் வெற்றி பெற்றவருமான, வேணுகோபாலின் தொகுதி.

இதை, தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக உள்ள முருகனுக்காக, பாஜக கேட்கிறது. 
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், வாசனுக்காக தஞ்சாவூர் தொகுதியை அதிமுக., பரிசீலித்து வரும் நிலையில், அத்தொகுதியையும், பாஜக கேட்கிறது.

மதுரை தொகுதியை, பாஜகவின் தேசிய பிரபலம் மற்றும் வானதி சீனிவாசன் அல்லது மகாலட்சுமி என பெயர்களை குறிப்பிட்டு, ஒதுக்கும்படி வலியுறுத்தப்பட்டது. தவிர, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை போன்ற உறுதியாக எதிர்பார்க்கப்படும் தொகுதிகளோடு சேர்த்து, தங்களது தோழமை கட்சி தலைவர்களுக்கு தேவையான தொகுதிகளையும், பாஜக தேட்டு வருவிதாக கூறப்படுகிறது.

புதிய தமிழகம் தலைவர், கிருஷ்ணசாமிக்காக, தென்காசியும்; இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரி வேந்தருக்காக, பெரம்பலுாரும்; புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகத்துக்காக, வேலுாரும் கேட்கிறது. இப்படியே போனால் அதிமுகவுக்கு போட்டியிட தொகுதிகளே இல்லாமல் போய்விடும் என நிலை உருவாகிவிடும் என்று அக்கட்சித் தலைவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.