திமுகவின் கிராம சபை கூட்டத்துக்குப் போட்டியாக பட்டிமன்றத்தை அறிவித்துள்ளது அதிமுக.

திமுக சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டங்களை அக்கட்சியினர் நடத்திவருகிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், திருச்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் ஆளும் அதிமுக அரசை திமுகவினர் தாக்கி பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்கள். “மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது இதை ஏன் செய்யவில்லை” என்று முதல்வர் தொடங்கி அதிமுக அமைச்சர்கள் வரை எல்லோரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கெல்லம் பதில் சொல்லாத திமுக, தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறது.

நாடாளுமன்றத்  தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திமுகவின் இந்தக் கூட்டத்தை அதிமுக அரசு ரசிக்கவில்லை. இந்நிலையில் இதற்கு பதிலடியாகப் பட்டிமன்றத்தை நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையில், “அரசின் மீது குற்றம் சுமத்துவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ள திமுகவின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 22 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதான சட்டப்பேரவைத் தொகுதியில் பட்டிமன்றம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்கள்.

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலர் வைகைச் செல்வன் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பட்டிமன்றத்தில் கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர்.