அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுமென தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அது கட்டுக்கடங்காமல் வேகமாக பரவி வருகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதனால் அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுப்  போக்குவரத்து என அனைத்தும் முடங்கியுள்ளது. 

தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் எப்போது தான் திறக்கப்படும் என்ற கேள்வி பெரும்பாலான பெற்றோர்களிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 12-ஆம் வகுப்பு மார்க் சீட்டை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அதாவது, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்டபின் பாடபுத்தகம் வழங்கப்படும் என்றும், கொரோனா தொற்று குறைந்தவுடன் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்  கூறியிருந்தார். இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.