உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும்  உள்ள போலீசார் இன்று துப்பாக்கிகளுக்கு பதிலாக துடைப்பம் கையுமாக போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்தனர்.

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து அறிவிக்கை விடுத்த முதல்வர் ஆதித்யநாத்தின் உத்தரவால் போலீசார் அனைவரும் இன்று துடைப்பமும், முறமுமாக காணமுடிந்தது.

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் பல்ேவறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.

பெண்களின் பாதுகாப்புக்கு ஆன்டி ரோமியோ படை, பசுவதை தடை, சட்டவிரோத இறைச்சிக்கடைகள் மூடல், அரசுஊழியர்களுக்கு ஒழுக்க நெறிகள், மக்கள் குறைதீர்ப்பு என அனைத்திலும் வித்தியாசமான நடவடிக்கை எடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், அனைத்து அரசுஅலுவலகங்களும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்த முதல்வர் ஆதித்யநாத், போலீஸ் நிலையத்தை போலீசாரை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் சுத்தம் செய்யும் பணி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவையடுத்து, இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் துப்பாக்கி ஏந்துவதற்கு பதிலாக காலையில், துடைப்பம், முறம் ஏந்தி குப்பையை கூட்டும் பணியில் இறங்கினர்.

லக்னோ, இந்திரா நகர், தலகோத்தா, முசாபர்நகர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசார் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.