தவறுகள் செய்துள்ள சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர், கட்சியில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று சொல்வது, அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். சட்டரீதியாக அவர் வெளியே வருவார்களா என்று சொல்வது சந்தேகம் தான். காரணம் சிறைச்சாலையில் அவர் நன்னடத்தையோடு செயல்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தவறுகள் செய்துள்ள அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அவர் எப்போது வந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே, அவர்கள் எல்லாவிதமான முயற்சியும் செய்து பார்த்தார்கள். ஆனால் தோல்வியைத் தான் தழுவினார்கள். இனி இந்த கட்சியில் அவருக்கு எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. கடை சாத்தப்பட்டு விட்டது. வந்தால் அவர்கள் வெளியே நின்று கும்பிட்டு விட்டு செல்ல வேண்டியது தான் என விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;-  ஏரி பகுதிக்கு தூக்கிச்சென்று ஏடாகூடமாக பலாத்காரம்.. வெறி தீராததால் அந்த இடத்தில் கல்லை போட்ட கொடூரன்கள்.!

மேலும் பேசிய அவர் மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாகவே மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு எந்தவிதமான தீங்கும் இல்லை என்பதை அவர்களின் அடி மனதில் கொண்டுபோய் நிறுத்தியிருக்க வேண்டும். அந்த சிறிய தவறு செய்த காரணத்தில் இன்று இவ்வளவு பிரச்சனை வந்துள்ளது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் 70 ஆண்டுகளில் சமூகத்துக்கு எதையாவது செய்திருக்கிறார்களா, சிந்தித்திருக்கிறார்களா? முடிந்தால் அவர்கள்பதில் சொல்லட்டும். இளம் வயதிலேயே மக்கள் மத்தியில் வந்திருக்க வேண்டும். 70 வயதுவரை எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவித்துவிட்டு எல்லா நிலையிலும் உயர்ந்துவிட்டு, இப்போது நாங்கள் இந்த நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்று சொன்னால் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.