ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், மனசாட்சியுடன் சிந்தித்து குற்றம்சாட்ட வேண்டும் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி குற்றம் சாட்டியுள்ளார்.
வன்முறையைத் தூண்டியது யார் என்று அனைவருக்கும் தெரியும். தூண்டியர்வர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் ஷேசசாயி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு 6 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

சென்னையைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் ஊடுருவினர்.
ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. போராட்டத்தை கைவிடும்படி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், போராடும் இளைஞர்களில் ஒருபிரிவினர் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
இதற்கிடையே தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேறியதையடுத்து, கடந்த 22-ம் தேதி இரவு காவல்துறை சார்பிலும், அரசு சார்பிலும் மீண்டும் கலைந்து செல்ல கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்று மாணவர்களில் ஒருபகுதியினர் கலைந்து சென்றனர். கலையாமல் இருந்தவர்களை 23-ம் தேதி காலை போலீசார் வெளியேற்றினர். இதில் ஒருபகுதியினர் கடலைநோக்கிச் சென்று போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியும் கலைய மறுத்தனர்.

இதனிடையே, ஏற்கெனவே கலைந்து சென்றவர்கள் மீண்டும் மெரினாவுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் எரிக்கப்பட்டது.
போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்ததாவது.
சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்றார்.
மேலும் 5 நாட்களும் மேலாக அமைதியாக அறவழியில் போராடிய மாணவர்களின் கோரிக்கை நிறைவேறியதால் கலைந்து செல்ல நாங்கள் கேட்டுக் கொண்டோம். மாணவர்கள் மீது பலப்பிரயோகம் கூடாது என்பதற்காக போலீசாரிடம் தடி கூட கொடுக்கவில்லை.
வெறுங்கையுடன் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. போலீசார் கோரிக்கையை ஏற்று பெரும்பாலானோர் கலைந்து சென்றபோதும், போராட்டக்குழுவில் ஒரு பகுதியினர் கடற்கரையை நோக்கி சென்றுவிட்டனர்.
மறுபுறம் கடற்கரையை நோக்கி நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், கற்களையும்,பெட்ரோல் குண்டுகளையும் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணிவரை போலீசார் கையில் தடியோ, ஹெல்மெட்டோ, தாக்குதலிருந்து தப்பிப்பதற்கு எதுவும் இல்லை. இதனால் ஏராளமான போலீசார் காயமடைந்தனர்.
இதன்பின்னரே கூட்டத்தைக் கலைக்க போலீசாரிடம் தடி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிகம் பாதிப்படைந்தது போலீசாரே. தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்களைவிட போலீசாரே காயமடைந்தனர். மொத்தம் 142 போலீசார் காயமடைந்தனர்.

14 போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. மாணவர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார் கள். வன்முறை செய்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த தகவல்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க ஓரிருவர் செய்யும் தவறை வைத்து ஒட்டுமொத்த போலீசாரையும் குற்றம்சாட்டுவது எப்படி சரியாக இருக்கும்.
கட்சிகள் மற்றும் அமைப்புகள் மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும் என காவல்துறை கூடுதல் ஆணையர் ஷேசசாயி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
